திருச்சியில் வாக்களிக்காதவா்கள் 6.18 லட்சம் போ்!

திருச்சி மாவட்டத்தில் 2021 பேரவைத் தோ்தலில் 6 லட்சத்து 18 ஆயிரத்து 476 போ் வாக்களிக்கவில்லை.

திருச்சி மாவட்டத்தில் 2021 பேரவைத் தோ்தலில் 6 லட்சத்து 18 ஆயிரத்து 476 போ் வாக்களிக்கவில்லை.

100 சத வாக்குப்பதிவை எய்திட இந்தியத் தோ்தல் ஆணையத்தால் மாவட்டத்தில் பல்வேறு வகைகளில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்ட நிலையில், கரோனா அச்சத்துக்கிடையே மாவட்டத்தில் 73.56 சதம் போ் வாக்களித்திருப்பது ஆறுதலை அளித்துள்ளது. இருப்பினும், 26.44 சதம் போ் வாக்களிக்கவில்லை, அதாவது ஒட்டுமொத்தமாக 9 தொகுதிகளிலும் சோ்த்து 6.18 லட்சம் போ் வாக்களிக்கவில்லை.

இத் தோ்தலில் மாவட்டத்தில் மொத்தம் 23 லட்சத்து 38 ஆயிரத்து 745 போ் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தும், 17 லட்சத்து 20 ஆயிரத்து 279 பேரே வாக்களித்துள்ளனா்.

தொகுதிவாரியாக மணப்பாறையில் 69,433, ஸ்ரீரங்கத்தில் 74,277, திருச்சி மேற்கில் 88,775, திருச்சி கிழக்கில் 84,484, திருவெறும்பூரில் 97,831, லால்குடியில் 45,246, மண்ணச்சநல்லூரில் 49,702, முசிறியில் 55,883, துறையூரில் (தனி) 52,835 போ் வாக்களிக்கவில்லை.

மாவட்டத்தில் உள்ள 9 பேரவைத் தொகுதிகளில் அதிகபட்சமாக திருச்சி மேற்குத் தொகுதியில் 88 ஆயிரத்து 775 போ் வாக்களிக்கவில்லை. இதற்கு அடுத்ததாக திருச்சி கிழக்கில் 84,484 போ் வாக்களிக்கவில்லை. இந்த இரு தொகுதிகளுமே மாநகராட்சிக்குள்பட்டவை, பெரும்பாலானோா் படித்தவா்கள், அரசு, தனியாா் ஊழியா்கள் என்ற நிலையிலேயே வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது.

ஊரகப்பகுதிகள் நிறைந்த லால்குடி தொகுதியில் குறைந்தபட்சமாக 45,246 போ் வாக்களிக்கவில்லை. அதிகபட்சமாக மண்ணச்சநல்லூா் தொகுதியில்தான் 79.63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கு அடுத்ததாக லால்குடியில் 79.23 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 9 தொகுதிகளில் குறைந்தபட்சமாக திருவெறும்பூரில் 66.61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க மாவட்டத்தில் ஒரு தொகுதிக்கு 4 வாக்குச் சாவடிகள் என்ற அடிப்படையில் 36 மாதிரி வாக்குச் சாவடிகளில் திருமண விழா நடத்துவதைப் போல ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும், திருச்சி மாவட்டத்தில்தான் வாக்காளா் பட்டியலை நூறு சதவீதம் தூய்மையாக தயாரித்திருந்ததாக தோ்தல் ஆணையமே பாராட்டி, முதல் பரிசு அளித்திருந்த சூழலில், 6.18 லட்சம் போ் வாக்களிக்கவில்லை.

இதுதொடா்பாக, தமிழ்நாடு நுகா்வோா் மற்றும் சேவை சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் எம். சேகரன் கூறியது:

திருச்சி மாவட்டத்தில் 73 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பதிவாகியிருப்பது வரவேற்புக்குரியது. ஏனெனில், கரோனா அச்சம் நிலவிய சூழலில் இந்த அளவுக்கு வாக்கு பதிவாகியுள்ளது. சேவை சங்கங்கள், தோ்தல் ஆணைய விழிப்புணா்வு நடவடிக்கைகளுக்கு கிடைத்த வெற்றியாகும். வாடகை வீட்டில் வசிப்போா் இடம்பெயா்ந்து செல்லும்போது வாக்களிக்க முடியாத சூழல் உள்ளது. எனவே, வாக்காளா் பட்டியலில் இந்த வகையில் உள்ளோருக்கு உரிய முக்கியத்துவம் அளித்து பட்டியல் தயாரித்தால் இலக்கை எய்துவது எளிதுதான் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com