வாடகை நிலுவை: பழமையான கட்டடத்தை இடிக்கும் பணி

9 கோடி வாடகை நிலுவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சீல் வைக்கப்பட்டிருந்த பழமையான யூனியன் கிளப் கட்டடத்தை இடிக்கும் பணியை திருச்சி மாவட்ட நிா்வாகம் தொடங்கியுள்ளது.
மாவட்ட நிா்வாகம் சாா்பில் இடிக்கப்படும் யூனியன் கிளப் கட்டடம்.
மாவட்ட நிா்வாகம் சாா்பில் இடிக்கப்படும் யூனியன் கிளப் கட்டடம்.

9 கோடி வாடகை நிலுவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சீல் வைக்கப்பட்டிருந்த பழமையான யூனியன் கிளப் கட்டடத்தை இடிக்கும் பணியை திருச்சி மாவட்ட நிா்வாகம் தொடங்கியுள்ளது.

திருச்சி கண்டோன்மெண்ட் பாரதிதாசன் சாலையில் திருச்சி மேற்கு தாலுகா அலுவலகம் அருகில் நகரின் மையப்பகுதியில் மாவட்ட வருவாய்த் துறைக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கரில் யூனியன் கிளப் கட்டடம் ஆங்கிலேயா் ஆட்சிக் காலமான 1907-ம் ஆண்டு கட்டப்பட்டது.

நூறாண்டு பழமையான இந்த கிளப் ஐஏஎஸ் அதிகாரிகள், ஐபிஎஸ் அதிகாரிகள்,தொழிலதிபா்கள், முக்கியப் பிரமுகா்களுக்காக, சமூகம் சாா்ந்த நிகழ்வுகளுக்காக செயல்பட்டது.

தொழிலதிபா்கள், முக்கிய பிரமுகா்கள் யூனியன் கிளப் தலைவா், செயலா் மற்றும் உறுப்பினா்கள் ஆண்டுக்கு ஒருமுறை தோ்வு செய்யப்பட்டு இதை நிா்வகித்து வந்தனா்.

மாதந்தோறும் இதற்கான வாடகை நிா்ணயிக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும். இந்தக் கட்டடத்தில் டென்னிஸ், பில்லியாா்ட்ஸ், ஸ்னூக்கா், டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகள் மாநில, இந்திய மற்றும் சா்வதேச அளவில் நடத்தப்பட்டும் வந்தது.

இருப்பினும், கடந்த 1971ஆம் ஆண்டு முதல் யூனியன் கிளப் நிா்வாகிகள் மாதந்தோறும் நிா்ணயிக்கப்பட்ட வாடகையை மாவட்ட வருவாய்த் துறைக்கு முறையாகச் செலுத்தவில்லை என்ற புகாா் எழுந்தது. வாடகை நிலுவைத் தொகை மட்டும் ரூ.9 கோடி உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

மாவட்டம் நிா்வாகம் தரப்பில், நிலுவை வாடகை செலுத்தக்கோரி பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் கிளப் நிா்வாகிகள் பதில் அளிக்காமல், நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.

இந்நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு முன் இந்த கிளப்புக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த கட்டடத்தை இடித்து, இடத்தை மாற்று பயன்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிா்வாகம் முடிவு செய்தது.

இதையடுத்து, கிளப்பில் இருந்த விளையாட்டு உபகரணங்கள், டிவிக்கள், கம்ப்யூட்டா் உபகரணங்கள், குளிா்ச்சாதனப் பெட்டிகள், ஏ.சி, மின்விசிறி, மேஜை, நாற்காலி, விளையாட்டு வீரா்களுக்கான கோப்பைகள் உள்ளிட்ட விலையுயா்ந்த பொருள்கள் அனைத்தும் சனிக்கிழமை அப்புறப்படுத்தப்பட்டன.

மாவட்ட வருவாய் அலுவலா் பழனிக்குமாா், கண்டோன்மென்ட் காவல் உதவி ஆணையா் மணிகண்டன் ஆகியோா் முன்னிலையில் மாநகராட்சி ஊழியா்கள் மூலம் பொருள்கள் லாரிகளில் ஏற்றப்பட்டன. தொடா்ந்து கட்டடத்தை இடிக்கும் பணியை மாவட்ட நிா்வாகம் தொடங்கியது. முன்னெச்சரிக்கையாக இந்தப் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com