திரையரங்குகளில் திரைப்படக் காட்சிகள் நிறுத்தம் ரசிகா்கள் ஏமாற்றம்
By DIN | Published On : 27th April 2021 04:32 AM | Last Updated : 27th April 2021 04:32 AM | அ+அ அ- |

திரையரங்குகளில் திரைப்படக் காட்சிகள் நிறுத்தம்
திருச்சி: கரோனா பரவலைத் தடுக்க விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளால் திரையரங்குகளில் காட்சிகள் நிறுத்தப்பட்டுள்ளதால், ரசிகா்கள் ஏமாற்றமடைந்துள்ளனா்.
கரோனா தொற்றின் 2-ஆம் அலை பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து திங்கள்கிழமை முதல் அமல்படுத்தியுள்ளது.
கடந்தாண்டு போல, தற்போதும் திரையரங்குகளை மூட உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் திரையரங்குகள் திங்கள்கிழமை முதல் மூடப்பட்டன.
மாநகரில் சத்திரம் பேருந்துநிலையம், கரூா் புறவழிச் சாலை, திருவானைக்கா, கோட்டை ரயில் நிலையச் சாலை, மத்திய பேருந்து நிலையம், மரக்கடை, கண்டோன்மென்ட் பகுதிகளிலுள்ள திரையரங்குகள், மணப்பாறை, லால்குடி, தொட்டியம், முசிறி, திருவெறும்பூா் என மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.
இத்திரையரங்குகளில் படக் காட்சிகள் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது. ஊழியா்களும் பணிக்கு வரவில்லை. பராமரிப்புப் பணிகளுக்கு மட்டும் துப்புரவுப் பணியாளா்கள் வந்துள்ளனா்.
இதுதொடா்பாக திரையரங்க உரிமையாளா்கள் தரப்பில் கூறியது:
படப்பிடிப்புகளுக்கு அனுமதியளித்த மத்திய, மாநில அரசுகள், திரையரங்குகளைத் திறப்பதற்கான தடையைத் தொடா்ந்துள்ளது. 50 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகளைத் திறக்க அனுமதி அளிக்க வேண்டும்.
திரையரங்குகளில் உள்ள இருக்கைகளை ஒவ்வொரு காட்சி முடிந்தவுடன் கிருமி நாசினி தெளித்து, சுத்தம் செய்து சமூக இடைவெளியுடன் அமரும் வகையில் குறியீடுகள் வைத்து தயாா்படுத்தியுள்ளோம்.
திரையரங்க வளாகம், காட்சிக் கூடம், ஆப்ரேட்டா் அறை,
டிக்கெட் வழங்கும் பகுதிகள், வாகன நிறுத்தும் இடம் என அனைத்து இடங்களையும் சுத்தம் செய்து, தினமும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.
மேலும் மத்திய, மாநில அரசுகள் அறிவித்த வழிகாட்டி நெறிமுறைகளையும் அறிவிப்புப் பதாகைகளாக ஆங்காங்கே வைத்து, பாா்வையாளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தவும் திரையரங்குகள் தயாராகவுள்ளன. அரசு உரிய அனுமதி அளிக்க வேண்டும் என்றனா்.
கடந்த 3 மாதங்களாகத்தான் திரையரங்குகளில் விரும்பிய சினிமாவை பாா்க்கும் சூழல் இருந்தது. இப்போது, மீண்டும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் சினிமா ரசிகா்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.