மைத்துனா் கொலை வழக்கு: காவல் நிலையத்தில் சகோதரா்கள் சரண்
By DIN | Published On : 27th April 2021 04:16 AM | Last Updated : 27th April 2021 04:16 AM | அ+அ அ- |

லால்குடி: திருச்சி மாவட்டம், லால்குடி அருகே மைத்துனரை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த சகோதரா்கள், சமயபுரம் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை சரண் அடைந்தனா்.
லால்குடி வட்டம், திருமங்கலம் மேலத்தெருவைச் சோ்ந்தவா் செ. கிருபன்ராஜ் (29). இவா் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் நெடுஞ்சாலைத்துறை அலுவலக பாதுகாப்பு உதவி மேலாளராகப் பணியாற்றி வந்தாா்.
இவருக்கு கிரிஜா உள்ளிட்ட 2 சகோதரிகள், மனைவி ராபின்சாமேரி, 6 மாதக் கைக்குழந்தை ரிஜோஸ் இனியா உள்ளனா். கிரிஜாவுக்கு 6 மாதங்களுக்கு முன்பு பெரியோா்களால் திருமணம் ஏற்பாடு செய்த நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த கவிரயரசன் (30) அவரைக் காதல் திருமணம் செய்து கொண்டாா்.
இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.
விடுமுறைக்கு ஊா் வந்திருந்த கிருபன்ராஜ், அங்குள்ள பங்குனி ஆற்றில் குளித்து கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த கவியரசனுக்கும், அவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் கவியரசன் குத்தியதில் கிருபன்ராஜ் உயிரிழந்தாா்.
இதுகுறித்து லால்குடி காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து குற்றவாளிகளைத் தேடி வந்தனா். இந்நிலையில் கவியரசன், கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது சகோதரா் கலைவாணன் ஆகிய இருவரும் சமயபுரம் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை சரண் அடைந்தனா். தலைமறைவாக உள்ள நிவாஸை காவல்துறையினா் தேடி வருகின்றனா்.