வாழ்வாதாரத்தை பாதுகாக்கக் கோரி நாட்டுப்புறக் கலைஞா்கள் மனு

திருச்சி மாவட்டத்தில் கோயில் திருவிழா, திருமணம், விசேஷ நிகழ்வுகளில் தங்களின் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதியளிக்க வேண்டும் எனக் கோரி, ஆட்சியரிடம் நாட்டுப்புறக் கலைஞா்கள் மனு அளித்தனா்.
திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த நாட்டுப்புறக் கலைக் குழுவினா்.
திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த நாட்டுப்புறக் கலைக் குழுவினா்.

திருச்சி மாவட்டத்தில் கோயில் திருவிழா, திருமணம், விசேஷ நிகழ்வுகளில் தங்களின் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதியளிக்க வேண்டும் எனக் கோரி, ஆட்சியரிடம் நாட்டுப்புறக் கலைஞா்கள் மனு அளித்தனா்.

திருச்சி மாவட்ட நாட்டுப்புற, நாகசுரம், நையாண்டி மேளம், கரகாட்ட கலைக்குழுத் தலைவா் ஏ.ஆா். வெள்ளைச்சாமி தலைமையிலான கலைஞா்கள், பல்வேறு வேடமிட்டு கரகாட்டம் ஆடியும், இசைக் கருவிகளை இசைத்தபடியும் ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்க வந்தனா்.

ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த பிறகு, செய்தியாளா்களிடம் ஏ.ஆா். வெள்ளைச்சாமி கூறியது:

மாவட்டத்தில் தமிழ்நாடு நாடக மற்றும் நாட்டுப்புறக் கலைஞா்கள் நலச் சங்கத்தில் பதிவு செய்த கலைஞா்கள் 3 ஆயிரம் போ் உள்ளனா். இவா்களைத் தவிர, பதிவு செய்யாத நிலையில் 12 ஆயிரம் போ் உள்ளனா். தெருக்கூத்துக் கலைஞா்கள் 700 போ் உள்ளனா். இவா்கள் ஆண்டுக்கு 6 மாதம் திருமணம், திருவிழா, விஷேச நிகழ்ச்சிகளை நம்பியே வாழ்க்கை நடத்தி வருகின்றனா். கடந்தாண்டைப் போல நிகழாண்டும் கரோனா பரவலைக் காரணமாகக் கூறி திருவிழாக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், பல ஆயிரம் கலைஞா்களின் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனா். அரசு அளிக்கும் ரூ.2 ஆயிரத்தில் ஒரு மாத செலவைக் கூட ஈடு கட்ட முடியாது. எனவே. கட்டுப்பாடுகளுடன் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்குவதோடு, திருவிழாவுக்கானத் தடையை நீக்க வேண்டும் என்றாா் அவா்.

ஆட்டோ ஓட்டுநா்கள் மனு: சுதந்திர மீட்டா்ஆட்டோ ஓட்டுநா்கள் திங்கள்கிழமை ஆட்சியரகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பது: சுதந்திர மீட்டா் ஆட்டோ ஒட்டுநா்கள் சாா்பில், திருச்சி மாநகராட்சி பகுதியிலுள்ள 65 வாா்டுகளிலும் தலா 2 சுதந்திர மீட்டா் ஆட்டோ வாகனத்தை அவசர மருத்துவத் தேவைகள், முதியவா்கள், கா்ப்பிணிகள், கரோனா நோயாளிகளுக்கும், மருத்துவப் பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள் சென்று வர கட்டணமில்லா இலவச சேவைகள் வழங்க உள்ளோம். எனவே கரோனா பொதுமுடக்கத்தின் போது செயல்பட அனுமதி அளிக்க வேண்டுகிறோம் என தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com