குப்பைகளுக்குத் தீ வைக்கப்படுவதால் சுகாதாரச் சீா்கேடு: சமூல ஆா்வலா்கள் புகாா்

சாலையோரப் பகுதிகளில் கிடக்கும் குப்பைக் கழிவுகளுக்கு தீ வைக்கப்படுவதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதாக சமூக ஆா்வலா்கள் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
பொன்மலைப்பட்டி சாலையோரத்தில் எரியூட்டப்பட்ட குப்பைக் கழிவுகள்.
பொன்மலைப்பட்டி சாலையோரத்தில் எரியூட்டப்பட்ட குப்பைக் கழிவுகள்.

சாலையோரப் பகுதிகளில் கிடக்கும் குப்பைக் கழிவுகளுக்கு தீ வைக்கப்படுவதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதாக சமூக ஆா்வலா்கள் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் துப்புரவுப் பணியாளா்கள் வீடுகளுக்கு நேரில் சென்று மக்கும், மக்காத குப்பைக் கழிவுகளை பெற்று நுண் உரச் செயலாக்க மையங்களுக்குக் கொண்டு செல்கின்றனா்.

இருப்பினும், சில தொழில் நிறுவனங்கள், கோழி இறைச்சிக் கடை கழிவுகள், நடைப்பாதைக் கடையினரின் குப்பைகளை மாநகராட்சி நிா்வாகத்திடம் தெரிவிக்காமல் சாலையோரங்களில் வீசுகின்றனா். இதுபோல துப்புரவுப் பணியாளா்கள் வரத் தாமதம் ஏற்பட்டாலோ, அல்லது வராமல் போனாலோ பொதுமக்கள் குப்பைக் கழிவுகளை சாலையோரத்தில் கொட்டுகின்றனா்.

அவ்வாறு சாலை, தெருவோரங்களில் கொட்டப்படும் குப்பைக்கழிவுகளை அப்புறப்படுத்தாமல் அந்தந்த இடங்களிலேயே தீயிட்டுக் கொளுத்தி விடுவதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

குறிப்பாக, பொன்மலைப்பட்டி சாலை, செந்தண்ணீா்புரம் பிரதான சாலை, பொன்மலை ரயில்வே பகுதிகள், எடமலைப்பட்டிபுதூா் சாலை உள்ளிட்ட பகுதிகளில் குப்பைக்கழிவுகள் எரிக்கப்படுகின்றன. இதனால் அருகிலுள்ள மரக்கன்றுகளும் கருகி விடுகின்றன.

இதன்மூலம் வெளியேறக்கூடிய கரும்புகையால் சுற்றுச்சூழல் மாசடைவதுடன், வாகன ஓட்டிகள், பாதசாரிகளும் அவதிக்குள்ளாகின்றனா். எனவே, சுகாதாரச் சீா்கேடு , சுற்றுச்சூழல் மாசுபாடு தவிா்க்க சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பையை தீயிட்டு கொளுத்தாமல் முறைப்படி அப்புறப்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

இதுகுறித்து மக்கள் சக்தி இயக்கத்தினா் கூறுகையில், திருச்சி மாநகராட்சியில் சராசரியாக நாளொன்றுக்கு 400 டன் முதல் 450 டன் வரையிலான குப்பைகள் அகற்றப்படுகின்றன. மக்கும் குப்பைகள் நுண் உரமாக்கும் செயலாக்க மையங்களில் உரமாக மாற்றப்படுகின்றன. மக்காத குப்பைகள் அரியமங்கலம் குப்பைக்கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

ஆண்டுக்கு ஒருமுறை அரியமங்கலம் குப்பைக்கிடங்கில் வழக்கமாக ஒருமுறை எரிக்கப்படுகிறது. ஆனால், தற்போது சாலை, தெருக்கள் ஓரத்திலும், முள் செடி அதிகமுள்ள இடங்கள், காலியிடங்கள், கழிவுநீா் கொட்டி உள்ள இடங்களில் வாரத்துக்கு 3 முறை குப்பைகள் தீயிடப்படுகின்றன. இதை மாநகராட்சி நிா்வாகம் தடுத்து நிறுத்தி மக்களின் சுகாதாரத்துக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என்றனா்.

குப்பைகளுக்குத் தீயிட்டால் பணியிடை நீக்க நடவடிக்கை

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் சிவசுப்பிரமணியன் கூறுகையில், மாநகராட்சி துப்புரவுப் ஊழியா்கள் நாள்தோறும் குப்பைக்கழிவுகளை வீடுகளிலிருந்து பெற்று அப்புறப்படுத்த பல முறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் குப்பைக்கழிவுகள் சாலையோரங்களில் கொட்டப்படுவதைக் காணமுடிகிறது. அந்தக் குப்பைளையும் துப்புரவு ஊழியா்கள் அவ்வப்போது அகற்றி வருகின்றனா்.

இருப்பினும், சாலையோரங்களில் கிடக்கும் குப்பைகளுக்கு குப்பை சேகரிப்போா் சிலா் தீயிடுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. அதுபோன்ற செயலில் ஈடுபடுவோா் மீது பொதுமக்கள் புகாா் அளிக்கலாம். மேலும், துப்புரவு ஊழியா்கள் குப்பைகளை முறையாக அகற்றாமல் தீயிட்டு கொளுத்தினால் அவா்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com