துறையூர் அருகே சிறுத்தையின் நடமாட்டம், கால் தடம் பதிவு

துறையூர் அருகே சிறுத்தையின் கால் தடம் தரையிலும் மற்றும் நடமாட்டம் தானியங்கி புகைப்படக் கருவியிலும் பதிவாகி உள்ளது.
துறையூர் அருகே சிறுத்தையின் நடமாட்டம், கால் தடம் பதிவு


துறையூர் அருகே சிறுத்தையின் கால் தடம் தரையிலும் மற்றும் நடமாட்டம் தானியங்கி புகைப்படக் கருவியிலும் பதிவாகி உள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே ஆங்கியம் கிராமத்தைச் சேர்ந்த இருவரை சனிக்கிழமை சிறுத்தை தாக்கியது. இதையடுத்து அவர்கள் இருவரும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். 

இந்த நிலையில் திருச்சி மாவட்ட வனஅலுவலர் டி. சுஜாதா, திருச்சி வனப் பொறியியல் அலுவலர் ஆனந்தகுமார் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். 

திருச்சி வனச்சரக அலுவலர் குணசேகரன் துறையூர் வனச்சரக அலுவலர் பொன்னுசாமி ஆகியோர் தலைமையில் சிறுத்தையைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு வனத் துறையினர் அந்தப் பகுதியில் முகாமிட்டனர். 

சிறுத்தை வெளிப்பட்ட கோனேரிப்பட்டி குன்றைச் சுற்றிலும் 3 தானியங்கி புகைப்படக் கருவிகளை வனத் துறையினர் சனிக்கிழமை பொருத்தினர். 

இந்த நிலையில் சிறுத்தையின் நடமாட்டம் தானியங்கி புகைப்படக் கருவியில் சனிக்கிழமை இரவு 7.24 மணிக்கு பதிவாகியிருந்தது. அந்தப் பகுதியில் இரவு முழுவதும் வனத் துறையினர், காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். 

இவர்களுக்குத் தேவையான உணவு குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஆங்கியம் ஊராட்சித் தலைவர் ஹேமாவின் கணவர் பெரியசாமி செய்து கொடுத்து மக்களையும் கட்டுப்படுத்தி வந்தார்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை சிறுத்தையின் கால் தடம் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு பதிவாகி இருப்பது தெரியவந்தது. சிறுத்தையின் கால் தட பதிவு  கொல்லிமலை அடிவாரம் அருகே உள்ள ரமேஷ் என்பவரின் தோட்டம் வரை பதிவாகி உள்ளது.

இதனை அடுத்து வனத் துறைக்கு சொந்தமான காப்புக்காடு தொடங்குகிறது. ஆகையால் சிறுத்தை கொல்லி மலைக் காட்டுப் பகுதிக்குச் சென்று விட்டதாக வனத் துறையினர் கூறுகின்றனர். 

ஞாயிற்றுக்கிழமை காலை திருச்சி மாவட்ட உதவி வனப்பாதுகாவலர் நாகையா, வன அலுவலர்கள் குணசேகரன் (திருச்சி) பொன்னுசாமி ( துறையூர்) வனவர் பழனிச்சாமி, வனக் காப்பாளர்கள் கருப்பையா, மஞ்சு நசுருதீன் உள்ளிட்ட வனத் துறையினர் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் என்ற வேதிப் பொருளை பயன்படுத்தி சிறுத்தையின் காலடித் தட பதிவை சேகரிக்கும் பணியிலும் சிறுத்தை கொல்லி மலை அடிவாரத்தில் அடிவார காட்டுப் பகுதிக்குச் சென்று விட்டது தொடர்பாக பொதுமக்களிடம் அறிக்கை பெறும் பணியிலும் ஈடுபட்டிருந்தனர். 

சிறுத்தை காட்டுப் பகுதிக்குச் சென்றதை அடுத்து அந்த பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com