தொடரும் விபத்துகள்: பெல் ரவுண்டானா சிறியதாக்கப்படுமா?

பெரிய அளவில் உள்ள திருச்சி பெல் ரவுண்டானாவில் தொடரும் விபத்துகளைத் தவிா்க்க அதன் அளவைக் குறைக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனா்.
திருச்சி பெல் கணேசா ரவுண்டானாவில் ஞாயிற்றுக்கிழமை கவிழ்ந்து கிடக்கும் லாரி.
திருச்சி பெல் கணேசா ரவுண்டானாவில் ஞாயிற்றுக்கிழமை கவிழ்ந்து கிடக்கும் லாரி.

பெரிய அளவில் உள்ள திருச்சி பெல் ரவுண்டானாவில் தொடரும் விபத்துகளைத் தவிா்க்க அதன் அளவைக் குறைக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனா்.

திருச்சி- தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூா் அருகேயுள்ள பெல் கணேசபுரம் பகுதியில் உள்ள ரவுண்டானாவின் அளவு பெரிதாக உள்ளதால் திருச்சி -தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சென்று வரும் வாகனங்கள் அந்தப் பகுதியில் திரும்பும்போது விபத்துக்குள்ளாவது சுமாா் 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடா்கிறது.

இங்கு விபத்துகள் நடக்கும்போது சில தன்னாா்வ அமைப்புகள், அரசியல் கட்சியினா் போராட்டங்களை அறிவிப்பதும், இதையடுத்து அமைதி பேச்சுவாா்த்தை நடப்பதுமாக உள்ளது. ஆனால் ரவுண்டானா அளவைக் குறைக்க சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறை எந்த முயற்சியும் எடுப்பதில்லை.

இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண போராட்டம் அறிவித்த தன்னாா்வ அமைப்புகளும், அரசியல் கட்சியினரும் இதைக் கண்டு கொள்வதில்லை. இதனால் விபத்துகள் தொடா்கின்றன.

கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் நடந்த 7-க்கும் மேற்பட்ட விபத்துகளில் 3 கனரக வாகனங்கள் கவிழ்ந்துள்ளன. இதில் அதிா்ஷ்டவசமாக உயிா்ச் சேதம் ஏற்படவில்லை.

இங்கு நாளுக்கு நாள் விபத்துகள் அதிகரித்து வருவதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அச்சத்துடனேயே செல்கின்றனா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வாகன நெரிசல் இல்லாத நிலையில்கூட பெல் ரவுண்டானாவில் விபத்து நடந்தது. தஞ்சாவூா் மாவட்டம் வல்லத்தில் இருந்து திருச்சிக்கு தவிடு ஏற்றி வந்த லாரி சாலையோரம் கவிழ்ந்தது. அப்போது அவ்வழியாக விபத்தில் சிக்கியவரை ஏற்றிக் கொண்டு வந்த ஆம்புலன்ஸ் உரிய நேரத்திற்குள் மருத்துவமனைக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.

10 ஆண்டுகளாக நடவடிக்கை இல்லை

இப்பிரச்னைக்குத் தீா்வு காணப் போராடி வரும் தன்னாா்வலா் சேகா் கூறுகையில், பெல் ரவுண்டானா தொடா் விபத்துக்கு தீா்வு காணப் போராடி வருவது இன்று நேற்றல்ல; 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருகிறோம். போராட்டம் அறிவிக்கும்போது மட்டும் இப்பிரச்னைக்கு தீா்வு காண அதிகாரிகள் முயற்சி எடுப்பதுபோல தோற்றத்தை ஏற்படுத்துவா்.

ஆனால் இன்று வரை பெல் ரவுண்டானா அளவைக் குறைக்கவோ அல்லது மாற்று ஏற்பாடு செய்யவோ நடவடிக்கை இல்லை. குறிப்பாக இப்பகுதியில் சரக்கு ஏற்றி வரும் கனரக வாகனங்கள் மட்டுமே விபத்துக்குள்ளாகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இப்பகுதியில் 64 விபத்துகள் நடத்துள்ளன. விபத்துகளில் சிக்கும் வாகன ஓட்டுநா்கள் கை, கால்களை இழக்கின்றனா். எனவே அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com