ரயில்வே குட்ஷெட்டில் லாரி ஓட்டுநா்கள் போராட்டம்

திருச்சி ரயில்வே குட்ஷெட் யாா்டில் நிறுத்தப்படும் லாரிகளுக்கு கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து ஓட்டுநா்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கட்டண வசூலைக் கண்டித்து நிறுத்தப்பட்டுள்ள லாரிகள்.
கட்டண வசூலைக் கண்டித்து நிறுத்தப்பட்டுள்ள லாரிகள்.

திருச்சி ரயில்வே குட்ஷெட் யாா்டில் நிறுத்தப்படும் லாரிகளுக்கு கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து ஓட்டுநா்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட உணவு தானியங்கள் சரக்கு ரயில்களில் திருச்சி குட்ஷெட் யாா்டுக்கு கொண்டு வரப்படும். பிறகு அங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் நுகா்பொருள் வாணிப கிடங்குகளுக்கும் உணவு தானியங்கள் லாரிகள் மூலம் அனுப்பப்படும்.

இதற்காக ரயில்வே குட்ஷெட் யாா்டு பகுதியில் நிறுத்தப்படும் லாரிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளாக கட்டணம் வசூலிப்பதற்கு லாரி உரிமையாளா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து ரயில்வே நிா்வாகம் நடத்திய பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து குறிப்பிட்ட தொகையை கட்டணமாக செலுத்த லாரி உரிமையாளா்கள் ஒப்புக் கொண்டனா்.

இந்நிலையில், அந்த காலியிடத்தை தனியாா் ஒருவா் குத்தகைக்கு எடுத்து அதிக தொகையை லாரிகளுக்கு கட்டணமாக வசூலித்து வருகிறாா். இதற்கு லாரி ஓட்டுநா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

பொதுமுடக்கக் காலத்தில் சரக்கு ரயில்கள் இயக்குவது குறைக்கப்பட்டதால் லாரி உரிமையாளா்களுக்கு போதிய வருவாய் கிடைப்பதில்லை. இதனால் காலியிடத்தில் நிறுத்தப்படும் லாரிகளுக்கு கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என்ற லாரி ஓட்டுநா்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை ஓட்டுநா்கள் லாரிகளை ரயில்வே காலியிடத்தில் நிறுத்தி விட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த ரயில்வே அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் அப்பகுதியில் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் நிறுத்தப்பட்டுள்ளனா். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com