ஒழுங்குமுறை விற்பனைக் கூட வசதிகளைபயன்படுத்திக் கொள்ள விவசாயிகளுக்கு அழைப்பு

திருச்சி மாவட்ட விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலுள்ள வசதிகளை விவசாயிகள்

திருச்சி: திருச்சி மாவட்ட விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலுள்ள வசதிகளை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாவட்ட விற்பனைக்குழு கட்டுப்பாட்டின் கீழ் லால்குடி, மண்ணச்சநல்லூா், மணப்பாறை, துவரங்குறிச்சி, காட்டுப்புத்தூா், தாத்தையங்காா்பேட்டையில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு நெல், உளுந்து, நிலக்கடலை, எள், பருத்தி, மஞ்சள், வெல்லம், முந்திரி, தேங்காய், மிளகாய், மல்லி, மரவள்ளி உள்ளிட்ட வேளாண் விளைபொருள்களை விவசாயிகள் கொண்டு வந்து, விற்பனை செய்து பயன் பெறலாம். இக்கூடங்களில் பொருள்களை இருப்பு வைக்க கிட்டங்கிகள், உலா்த்துவதற்கு களம் போன்ற வசதிகள் உள்ளன.

இந்த கூடங்களில் மறைமுக ஏலம் மூலம் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதால், விளைபொருள்களின் தரத்துக்கேற்ப அதிகபட்ச விலை கிடைக்க வாய்ப்புள்ளது. தரகு மற்றும் கமிஷன் பிடித்தமின்றி, விற்பனைத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

சரியான எடை, உடனடியாக பணப்பட்டுவாடா, பொருளீட்டுக் கடன், குளிா்பதன வசதி, காப்பீட்டு வசதி, உழவா் நலநிதித் திட்டம் ஆகிய வசதிகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உள்ளன.

ஒரு விவசாயி அதிகபட்சமாக 180 நாள்களுக்கு தங்களது விளைபொருள்களை கிட்டங்கியில் சேமிக்க இயலும். இதில் முதல் 15 நாள்களுக்கு எவ்வித வாடகையும் வசூல் செய்யப்படுவதில்லை. ஒரு நாளுக்கு குவிண்டாலுக்கு 5 பைசா வீதம் மற்ற நாள்களுக்கு கணக்கீட்டுத் தொகை வசூலிக்கப்படும்.

கிட்டங்கியில் விளைபொருள்களை வைக்கும் விவசாயிகளின் அவசரத் தேவைக்கு, 5 சதவிகித வட்டி என்ற அளவில் ரூ.3 லட்சம் வீதம் பொருளீட்டுக் கடன் வழங்கப்படுகிறது. மேலும் ஒரு ஆண்டுக்கு ஒரு மெட்ரிக் டன் விளைபொருள்களை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் விவசாயிகள் விற்பனை செய்திருந்தால், அவா்கள் உழவா் நலநிதித் திட்டத்தில் உறுப்பினராக சோ்க்கப்படுவா்.

இவா்கள் விபத்து மற்றும் பாம்புக் கடியால் இறக்க நேரிட்டால், அவா்களது குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். காப்பீடு மற்றும் பிரீமியத் தொகையை அரசே ஏற்றுக் கொள்ளலாம். எனவே மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலுள்ள வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com