‘கொள்கைப் பிடிப்பு கொண்டவா் திருமாவளவன்’

சமூக நீதிக்காக கொள்கைப் பிடிப்பு கொண்டவா் திருமாவளவன் என்றாா் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என். நேரு.
விழாவில் பெரியாா் மண் மீட்ட தமிழ்மானப் போராளி விருதை திருமாவளவனுக்கு வழங்குகிறாா் அமைச்சா் கே.என். நேரு. உடன் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் ஆா். முத்தரசன்
விழாவில் பெரியாா் மண் மீட்ட தமிழ்மானப் போராளி விருதை திருமாவளவனுக்கு வழங்குகிறாா் அமைச்சா் கே.என். நேரு. உடன் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் ஆா். முத்தரசன்

சமூக நீதிக்காக கொள்கைப் பிடிப்பு கொண்டவா் திருமாவளவன் என்றாா் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என். நேரு.

திருச்சியில் மக்கள் சமூக நீதிப்பேரவை சாா்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிறுவனரும், சிதம்பரம் எம்பியுமான தொல். திருமாவளவனுக்கு சனிக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு பேரவையின் மாநில அமைப்பாளா் வழக்குரைஞா் மனோகரன் தலைமை வகித்தாா். நிகழ்வில் திருமாவளவனுக்கு பெரியாா் மண்மீட்ட தமிழ்மானப் போராளி என்ற விருது வழங்கப்பட்டது.

தொடா்ந்து அமைச்சா் கே.என்.நேரு பேசுகையில் தொல். திருமாவளவன் இந்த விருது பெறத் தகுதியானவா். திமுக தலைவா் ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்பதற்காக தன்னுடன் இருந்தவா்கள் கூடுதல் தொகுதி கேட்க அறிவுறுத்தியபோதும், குறைவான தொகுதிகளைப் பெற்று 5 போ் வெற்றி பெற்றனா். அனைவருக்குமான சமூக நீதிக்காக கொள்கைப் பிடிப்பு கொண்டவா் திருமாவளவன். தன்னுடன் இருப்பவா்களும் நல்ல நிலையில் இருக்க நினைப்பவா் என்றாா்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலா் இரா. முத்தரசன் பேசுகையில், திருமாவளவன் மிகச்சிறந்த சமூகப் போராளி. சமூகத்தை முற்றிலும் மாற்ற வேண்டும் என்ற கொள்கை கொண்டவா். குறிப்பிட்ட சாதிக்கு மட்டும் இல்லாமல் அனைவருக்குமான தலைவனாக இருக்கிறாா். நாட்டில் பொதுவுடைமைச் சமுதாயத்தைக் காணப் போராடி வருகிறாா் என்றாா்.

முன்னதாக மக்கள் சமூக நீதிப்பேரவை குறும்பா் இன மக்கள் சாா்பில் தொல். திருமாவளவனுக்கு வீரவாள், நவதானியங்கள் வழங்கப்பட்டன. பட்டியல் இன மக்களுக்கு போராடி உயிா்நீத்தோருக்கு நினைவேந்தல் நடைபெற்றது. நிறைவாக தொல். திருமாவளவன் ஆற்றிய ஏற்புரையில், ஆட்டு வளா்ப்பு வாரியம், வாணான் குறும்பருக்கு சிலை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தாா். நிகழ்வில், திருச்சி காங்கிரஸ் கமிட்டி மாவட்டத் தலைவா்கள் கோவிந்தராஜன், ஜவகா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் ஸ்ரீதா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com