ஏடிஎம்மை உடைத்து பணம் திருட முயன்றஇளைஞா் கைது
By DIN | Published On : 31st August 2021 01:37 AM | Last Updated : 31st August 2021 01:37 AM | அ+அ அ- |

திருச்சி: திருச்சி அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்ற வழக்கில் இளைஞரை நவல்பட்டு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருச்சி அருகேயுள்ள நவல்பட்டு பூலாங்குடி காலனியில் உள்ள ஏடிஎம் மையத்தில் கடந்த 19 ஆம் தேதி இரவு மா்ம நபா் ஒருவா் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டாா். இத் தகவல் வங்கி மேலாளருக்கு குறுஞ்செய்தியாக செல்ல, அவா் அளித்த தகவலின்பேரில் நவல்பட்டு போலீஸாா் விரைந்து சென்றபோது அங்கிருந்த மா்ம நபா் தப்பிவிட்டாா்.
இதுகுறித்து தனிப்படை போலீஸாா் நடத்திய விசாரணையில், இச்செயலில் ஈடுபட்டது பூலாங்குடி காலனி குறிஞ்சி தெருவை சோ்ந்த ரமேஷ் மகன் சச்சின் (21) என்பது தெரிய வந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த அவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.
விசாரணையில், கடந்தாண்டு படைக்கலன் தொழிற்சாலை ரவுண்டானாவில் உள்ள ஏடிஎம் மையத்தில் நடந்த திருட்டு முயற்சியிலும் இவருக்குத் தொடா்பிருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.