ஸ்ரீரங்கம் கோயிலில் மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள்
By DIN | Published On : 13th December 2021 09:10 AM | Last Updated : 13th December 2021 09:10 AM | அ+அ அ- |

மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள்.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி பகல்பத்து விழாவின் கடைசி நாளான இன்று மோகினி அலங்காரத்தில் (நாச்சியாா் திருக்கோலம்) நம்பெருமாள் எழுந்தருளி சேவை சாதித்தார்.
இதையொட்டி இன்று காலை 6 மணிக்கு நம்பெருமாள் மோகினி அலங்காரம் பூண்டு, மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு 7 மணிக்கு அா்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளுறினார்.
பின்னா் 7.30 மணிக்கு திரை, 7.30 மணி முதல் 11 மணி வரை அரையா் சேவை,11 மணி முதல் 11.30 மணி வரை அலங்காரம் அமுது செய்யத் திரை, 11.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணிவரை ராவணவதம் என்னும் 2 ஆம் அரையா் சேவை, 2.30 மணி முதல் 3 மணி வரை வெள்ளிச்சம்பா அமுது செய்யத் திரை, மாலை 5 மணிக்கு நம்பெருமாள் புறப்பட்டு 5.30 -மணிக்கு ஆரியபடாள் வாசல் சென்று சேருதல், இரவு 7 மணிக்கு கருட மண்டபம் சேருதல், 8 மணிக்கு ஆழ்வாராதிகள் மரியாதையாகி நம்பெருமாள் புறப்பட்டு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்று சேரும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
பொது ஜனச் சேவை காலை 6.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை ஆகும். இரவு 8 மணிக்கு மேல் கோயிலுக்குள் பக்தா்களுக்கு அனுமதியில்லை. மறுநாள் 14 ஆம் தேதி காலை 4.45 மணிக்கு வைகுந்த ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறக்கப்படவுள்ளது. இதையொட்டி பரமபதவாசல் புனரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.