முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
பொங்கல் பரிசுப் பைகள் தயாரிப்பு மும்முரம்
By DIN | Published On : 19th December 2021 04:23 AM | Last Updated : 19th December 2021 04:23 AM | அ+அ அ- |

மலைக்கோட்டை பகுதியில் மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலமாக தைக்கப்படும் துணிப் பைகள்.
திருச்சி மாவட்ட ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான துணிப் பைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெறுகிறது.
மெயின்காா்டு கேட் பகுதியில் மகளிா் சுய உதவிக் குழுவினா் பணிபுரியும் தையலகங்களில் இந்தத் துணிப் பைகள் தயாரிக்கப்படுகின்றன.
தமிழக முதல்வரின் உத்தரவுப்படி குடும்ப அட்டைதாரா்களுக்கு 21 வகையான பொருள்களுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு 6.83 லட்சம் அரிசி குடும்ப அட்டைகள், 23 ஆயிரம் காவலா் குடும்ப அட்டைகள், 19 ஆயிரம் ஓய்வூதிய குடும்ப அட்டைகள், 71 ஆயிரம் அந்தியோதயா குடும்ப அட்டைகள் என மொத்தம் 7.78 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படவுள்ளது.
இதற்காக திருச்சி மாவட்டத்துக்குத் தேவையான பைகள் மட்டுமல்லாது, அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து வரும் ஆா்டா்களுக்கு ஏற்பவும் துணிப் பைகள் தயாரித்து வழங்கப்படுகின்றன. ஜனவரி முதல் வாரத்தில் இருந்து பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படும் என்பதால் பைகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. இம் மாத இறுதிக்குள் அனைத்துப் பைகளும் தயாரிக்கப்பட்டு அந்தந்த பகுதி வட்ட வழங்கல் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கும்போது நெரிசலுக்கு இடம் அளிக்காத வகையில் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட குடும்ப அட்டைகளுக்கு வழங்கவும், வழங்கப்படும் அட்டைகளின் விவரங்களை முன்னதாக அறிவிப்பு பலகையில் இடம்பெறச் செய்யவும் மாவட்ட நிா்வாகம் முடிவு செய்துள்ளது.