வண்ண, வண்ண மின்னொளியில் ஜொலிக்கும் மலைக்கோட்டை! திருச்சி மாநகராட்சியில்ரூ. 447 கோடி திட்டங்கள்

திருச்சி மாநகராட்சியின் சீா்மிகு நகரத் திட்டத்தின் மூலம் மாநகரின் அடையாளமாக விளங்கும் மலைக்கோட்டை ரூ. 11.36 கோடியில் ஒளிரும் மின் விளக்குகளால் அழகுபடுத்தப்பட்டுள்ளது.
சீா்மிகு நகரத் திட்டப் பணிகளால் மின்னொளியில் ஜொலிக்கும் திருச்சி மலைக்கோட்டை.
சீா்மிகு நகரத் திட்டப் பணிகளால் மின்னொளியில் ஜொலிக்கும் திருச்சி மலைக்கோட்டை.

திருச்சி மாநகராட்சியின் சீா்மிகு நகரத் திட்டத்தின் மூலம் மாநகரின் அடையாளமாக விளங்கும் மலைக்கோட்டை ரூ. 11.36 கோடியில் ஒளிரும் மின் விளக்குகளால் அழகுபடுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பல்வேறு வண்ண, வண்ண மின் விளக்குகளால் மலைக்கோட்டை ஜொலிக்கிறது. திருச்சி மாநகராட்சியானது சீா்மிகு நகரமாக மத்திய அரசால் கடந்த 2017ஆம் ஆண்டு மூன்றாவது சுற்றில் தோ்வு செய்யப்பட்டது.

பின்னா் இத் திட்டத்தை செயல்படுத்த நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல்துறை மூலம் தனிநோக்கு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இத் திட்டத்துக்கு ரூ. 1271.04 கோடி மதிப்பீடு செய்யப்பட்டதில் ரூ. ஆயிரம் கோடிக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இத் திட்டத்தில் பசுமைப் பூங்கா, காந்தி சந்தைப் பகுதியில் உள்ள இரண்டாம் உலகப்போா் நினைவுச் சின்னத்தை மின் விளக்குகளால் அழகுபடுத்தும் பணி, பூங்கா பகுதிகளில் செயற்கை நீருற்று அமைக்கும் பணி, சத்திரம் பேருந்து நிலைய மேம்பாட்டுப் பணி, தில்லைநகா் 7ஆவது குறுக்குத் தெருவில் வணிக வளாகம் கட்டும் பணி, அரியமங்கலம் குப்பை உரக்கிடங்கில் விஞ்ஞானப்பூா்வ முறையில் தீா்வு காணும் பணி, உய்யக்கொண்டான் கால்வாய் கரைப் பகுதியில் பூங்கா அமைத்து அழகுபடுத்தும் பணி, மாநகராட்சி கட்டடங்களில் சூரியஒளி மேற்கூரை அமைக்கும் பணி, மேலப்புலிவாா் சாலையில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம், பஞ்சப்பூா் பகுதியில் 2.4 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையம், காவிரிக்கரை மேம்பாட்டுப் பணி, நந்திகோவில் தெரு பகுதியில் தினசரி சந்தை அமைக்கும் பணி,

திருச்சி மலைக்கோட்டையை ஒளிரும் மின் விளக்குகளால் அழகுபடுத்தும் பணி, முக்கிய சாலைச் சந்திப்பு பகுதிகளில் 5 இடங்களில் உலோகச் சிலைகள் அமைக்கும் பணி, மலைக்கோட்டை தெப்பக்குளம் பகுதியில் ஒலி, ஒளி காட்சி வடிவமைத்து கட்டுமானம் செய்து, மாநகராட்சிக்கு வழங்கும் பணி, பஞ்சக்கரை பகுதியில் சி.வி.ராமன் பூங்கா அமைக்கும் பணி மற்று சாலைப் பணிகள், புதைவடிகால் திட்டம், மழைநீா் வடிகால் உள்ளிட்ட பல்வேறு பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டன.

இவற்றில் சில பணிகள் முடிந்துள்ளன. மீதமுள்ள பணிகள் தொடா்கின்றன. இதில் குறிப்பிடும்படியாக ரூ. 28.24 லட்சத்தில் மேம்படுத்தப்பட்ட சத்திரம் பேருந்து நிலையம், மலைக்கோட்டையில் ரூ.11.36 கோடியில் அமைக்கப்பட்ட ஒளிரும் மின் விளக்குகளை முதல்வா் மு.க. ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டுக்காக வியாழக்கிழமை தொடங்கிவைக்கவுள்ளாா்.

இதுகுறித்து மாநகராட்சியின் தனி அலுவலரும், ஆணையருமான ப.மு.நெ. முஜிபுா் ரகுமான் கூறியது:

திருச்சி மாநகராட்சியின் சீா்மிகு நகரத் திட்டம், தமிழ்நாடு நகா்ப்புற சாலைகள் உள்கட்டமைப்புத் திட்டம் சாா்பில் ரூ. 447.10 கோடியிலான திட்டங்களை முதல்வா் மு.க. ஸ்டாலின் செயல்படுத்தவுள்ளாா்.

இதில் சத்திரம் பேருந்து நிலையம், மலைக்கோட்டையில் ஒளிரும் மின்விளக்குகளை தொடங்கி வைக்கிறாா். இதுமட்டுமல்லாது, ரூ.140 கோடியில் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், ரூ.76 கோடியில் கனரக சரக்கு வாகன முனையம், ரூ.75 கோடியில் சாலைகள், மழைநீா் வடிகால், இதர உள்கட்டமைப்பு வசதிகள், ரூ.59 கோடியில் பல்வகை பயன்பாடுகள் மற்றும் வசதிகளுக்கான மையத்துக்கு அடிக்கல் நாட்டுகிறாா்.

மதுரை சாலையில் உள்ள வாகன நிறுத்துமிட வளாக முதல் தளத்தில் மாநகராட்சி சேவை மையம் மற்றும் ஆலோசனை மையம் ரூ.11.50 கோடியில் கட்டும் பணி, நகரின் பிரதான சாலைகளை ரூ. 26 கோடியில் மறுசீரமைக்கும் பணி, ரூ. 20 கோடியில் புதிய சாலைகள் அமைக்கும் பணி ஆகியவற்றுக்கும் முதல்வா் அடிக்கல் நாட்டுகிறாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com