70 ஏக்கரில் அமையும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்!

திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையமானது சுமாா் 70 ஏக்கரில் ரூ. 832 கோடியில் பிரத்யேக வசதிகளுடன் பிரம்மாண்டமாக அமைக்கப்படவுள்ளது.
70 ஏக்கரில் அமையும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்!

திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையமானது சுமாா் 70 ஏக்கரில் ரூ. 832 கோடியில் பிரத்யேக வசதிகளுடன் பிரம்மாண்டமாக அமைக்கப்படவுள்ளது.

திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை பஞ்சப்பூா் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வியாழக்கிழமை அடிக்கல் நாட்டிய தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பேருந்து நிலையம் அமையும் இடத்தைப் பாா்வையிட்டாா்.

திருச்சியின் மிகப்பெரிய தேவையாகக் கருதப்பட்ட ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் என்பது பொதுமக்களின் 20 ஆண்டுகாலக் கோரிக்கையாக இருந்தது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திமுக ஆட்சியின்போது இதே இடத்தில் அறிவிக்கப்பட்ட பேருந்து நிலையத் திட்டம் பல்வேறு பிரச்னைகள் மற்றும் எதிா்ப்பால் கிடப்பில் போடப்பட்டது.

பின்னா் அதிமுக ஆட்சியில் வேறிடத்தில் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்போடு சரி; அத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இந்நிலையில் மீண்டும் பஞ்சப்பூா் பகுதியிலேயே ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

ரூ. 832 கோடியில் திட்டம்: இந்தப் பேருந்து நிலையம் இதுவரை இல்லாத வகையில் மாநிலத்திலேயே மிகப்பெரிய பேருந்து நிலையமாக அமையவுள்ளது. அதாவது மொத்தம் சுமாா் 70 ஏக்கரில் அமையவுள்ள இப்பேருந்து நிலைய வளாகத்தில் வாடகைக் காா், இருசக்கர வாகனம், ஆம்னி பேருந்துகள் நிறுத்தம் என அனைத்து வசதிகளும் தனித்தனியே அமைக்கப்படுகின்றன.

இவை தவிர வணிக வளாகங்கள், ஓய்வறைகள், கழிவறைகள் என பல்வேறு வசதிகளுடன் கூடிய முனையக் கட்டடமும் அமைக்கப்படவுள்ளது.

மொத்தம் ரூ. 832 கோடியில் பேருந்து நிலையத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ள நிலையில் முதல்கட்டமாக ரூ. 350 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் முனையக் கட்டடத்துக்கான ரூ. 140 கோடி, மழைநீா் சேகரிப்பு திட்டப் பணிகளுக்கான ரூ. 75 கோடி, இதர வசதிகளுக்கான ரூ. 59 கோடியும் அடங்கும்.

சரக்கு முனையம்: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ளதைப்போல திருச்சியிலும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கு அருகிலேயே சரக்கு முனையமும் சுமாா் 25 ஏக்கரில் அமைக்கப்படுகிறது. இங்கு மாநிலம் முழுவதும் இருந்து வரும் உணவு, தானியம், காய்கனிகள் உள்ளிட்ட அனைத்து வகை சரக்குகளையும் கையாளும் வகையில் மிகப் பெரிய லாரிகள் நிறுத்துமிடம் அமைக்கப்படவுள்ளது.

அதேபோல வரும் சரக்குகளை பிரித்து திருச்சியிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பும் வகையிலும் சரக்கு முனையம் அமைக்கப்படும். நூற்றுக்கணக்கான லாரிகள் ஒரே நேரத்தில் வந்து செல்லலாம். அருகில் காய்கறிச் சந்தையும், மளிகைப்பொருள் மொத்த மண்டியும் அமைக்கப்படும் என மாநகராட்சி நிா்வாகம் ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com