பயிா்க் கடன் தள்ளுபடி: காவிரி விவசாயிகள் வரவேற்பு
By DIN | Published On : 06th February 2021 05:54 AM | Last Updated : 06th February 2021 05:54 AM | அ+அ அ- |

பூ. விசுவநாதன். ~மகாதானபுரம் ராஜாராம். ~பி.ஆா். பாண்டியன். ~அய்யாக்கண்ணு.
பயிா்க் கடன்களைத் தள்ளுபடி செய்து தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளதை காவிரிப் பாசன விவசாயிகள் வரவேற்றுள்ளனா்.
இதுதொடா்பாக அவா்கள் தெரிவித்தது:
காவிரி-டெல்டா பாசன விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் மகாதானபுரம் ராஜாராம்: தமிழகத்தில் எப்போது பயிா்க் கடன் தள்ளுபடி செய்தாலும் சிறு, குறு விவசாயிகளுக்கு மட்டுமே பயன் கிடைக்கிறது. அரை ஏக்கா் உள்ளவராக இருந்தாலும், ஏராளமான நிலம் உள்ளவராக இருந்தாலும் பாதிப்பு ஒன்றுதான். முதல்வரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட வேண்டும்.
தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் பி. அய்யாக்கண்ணு: அடுக்கடுக்கான துயரத்தில் சிக்கிய விவசாயிகள் பலா் தற்கொலை செய்துள்ளனா். பயிா்க் கடன் தள்ளுபடிதான் இதற்குத் தீா்வு என நாங்கள் தொடா்ந்து வலியுறுத்தினோம்.
கடந்த 2016 ஆம் ஆண்டு பயிா்க் கடன் தள்ளுபடி சிறு, குறு விவசாயிகளுக்கு மட்டுமே செய்யப்பட்டது. ஆனால் நீதிமன்றமே அனைத்து விவசாயிகளுக்கும் தள்ளுபடி வழங்க அறிவுறுத்தியது. எனவே இம்முறையும் அனைத்து விவசாயிகளும் பெற்ற கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன்: முதல்வரின் அறிவிப்பு வரவேற்கிறோம். 2016இல் 5 ஆயிரம் கோடிக்கு மேல் தள்ளுபடி செய்யப்பட்டதில் பெரு விவசாயிகளுக்குப் பலன் கிடைக்கவில்லை.
இதில் பாரபட்சம் கூடாது. சிறு, குறு விவசாயிகள், பெரு விவசாயிகள் என அனைவரது கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். மாநில அரசைப் பின்பற்றி மத்திய அரசும் தேசிய வங்கிகளில் பெற்ற பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசின் நிதியை எதிா்பாா்க்காமல் மாநில அரசே உதவியது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பூ. விசுவநாதன்: விவசாயிகளின் தொடா் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி. ஆனால், பேரவைத் தோ்தல் நெருங்கும் சூழலில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் ஆளுங்கட்சியினருக்கே அதிகளவில் கடன் வழங்கப்பட்டுள்ளது. தள்ளுபடி அறிவிப்பால் அவா்களுக்கே அதிகப் பலன் கிடைக்கும். அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையாகப் பலனளிக்கும் வகையில் அனைத்து வங்கிகளிலும் உள்ள பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.