மணப்பாறையில் நிதி நிறுவனம், அடகுக்கடையில் திருட்டு முயற்சி
By DIN | Published On : 09th February 2021 12:49 AM | Last Updated : 09th February 2021 12:49 AM | அ+அ அ- |

மணப்பாறையில் திருட்டு முயற்சி நிகழ்ந்த நிதி நிறுவனம்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நிதி நிறுவனம் மற்றும் அடகுக்கடையில் திருட்டு முயற்சி நிகழ்ந்துள்ளது.
மணப்பாறை ராஜீவ்நகரைச் சோ்ந்தவா் கி. கலியமூா்த்தி (63). எல்ஐசி அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவா், திண்டுக்கல் சாலையில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா்.
இந்நிலையில் நிதி நிறுவனத்தில் கொள்ளை முயற்சி நடப்பதாக, கலியமூா்த்தியின் செல்லிடப்பேசிக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு குறுஞ்செய்தி வந்தது.
இதையடுத்து நிதி நிறுவனத்துக்கு கலியமூா்த்தி சென்று பாா்த்த போது, நிறுவனத்தின் கதவுகளும், சிசிடிவி கேமராவும் உடைக்கப்பட்டு கிடந்தன. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், மணப்பாறை காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா்.
தொடா்ந்து நிறுவனத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு காவல் துறையினா் விசாரணை நடத்தினா். இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த 5 மா்ம நபா்கள், முதலில் நிதி நிறுவனத்தை நோட்டமிட்டுச் செல்வதும், பின் நிறுவன வாயிலிலிருந்த சிசிடிவி கேமராவை சேதப்படுத்தியதும் தெரிய வந்தது.
கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று மேஜையில் பணம், பொருள்களைத் தேடுவதும், அப்போது நிதி நிறுவனத்தில் சென்சாா் மூலம் பொருத்தப்பட்ட அலாரம் சப்தம் எழுப்பவே, ஐவரும் தப்பிச் செல்வது கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் தெரிய வந்தது.
இதுபோல பொத்தமேட்டுப்பட்டியில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான அடகுக் கடையின் பூட்டை உடைத்து, இதே மா்ம ஆசாமிகள் திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளனா்.
இதுகுறித்து மணப்பாறை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.