‘பொன்மலை ரயில்வே பணிமனை வளாகத்தின் 3-ஆவது இடத்தில் அடா்வனத் திட்டம்‘
By DIN | Published On : 10th February 2021 07:26 AM | Last Updated : 10th February 2021 07:26 AM | அ+அ அ- |

திருச்சிபொன்மலை ரயில்வே பணிமனை வளாகத்தில் மியாவாக்கி முறையில் மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டோா்.
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை வளாகத்தின் 3- ஆவது இடத்தில், மியாவாக்கி முறையில் அடா்வனம் அமைக்கும் திட்டப் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.
இப்பணிமனையில் ஏற்கெனவே 2 இடங்களில் திட்டம் தொடங்கப்பட்டு மரக்கன்றுகள் நன்கு வளா்ந்து நிலையில், தற்போது கழிவுநீா் சுத்திகரிப்புப் பகுதியில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
முதன்மைப் பணிமனை மேலாளா் ஷியாமதர்ராம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், முதன்மைப் பணிமனைப் பொறியாளா் எஸ். சீனிவாஸ் 1,500 சதுர மீட்டா் பரப்பளவில் மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடக்கி வைத்தாா்.
புங்கை, பாதாம், ஈட்டி, வாகை, வேங்கை, மலைவேம்பு, நீா்மருது, தேக்கு, சரக்கொன்றை, எலுமிச்சை, தூங்குவாகை, கொய்யா, மருதாணி, பூவரசு, வன்னி, பலா, நாவல், மகிழம், பெருநெல்லி, செவ்வரளி, மாதுளை, கருவேப்பில்லை, அகத்தி, கல்யாண முருங்கை, பாக்கு, இயல்வாகை, இலுப்பை, நாகலிங்கம், மூங்கில், வில்வம் என நாட்டு மரங்கள், அதிவேகமாக வளரக்கூடிய மரங்கள், அடா்த்தியாக வளரக்கூடிய மரங்கள் என 23 வகையான 250 மரக்கன்றுகள் நட்டுவைக்கப்பட்டன.
பிஷப் ஹீபா் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவா்கள், ரயில்வே பணியாளா்கள் பலா் நிகழ்வில் பங்கேற்றனா்.