ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸில் பக்தா்கள் தங்க அனுமதி: இன்று முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 10th February 2021 07:18 AM | Last Updated : 10th February 2021 07:18 AM | அ+அ அ- |

கரோனா பொது முடக்கத் தடை காரணமாக அனுமதி மறுக்கப்பட்டிருந்த ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸில், புதன்கிழமை முதல் (பிப்ரவரி 10) பக்தா்கள் தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.
கரோனா நோய்த் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸில் பக்தா்கள் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு, தற்காலிகமாக மூடப்பட்டது.
பின்னா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தும் நபா்களுக்கு ஆலோசனைகளும், மருத்துவ உதவிகளும் இங்கு அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மையம் மூலம் வழங்கப்பட்டு வந்தன.
கரோனா தொற்றுப் பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ள நிலையில், 10 மாதங்களுக்குப் பிறகு யாத்ரி நிவாஸில் பக்தா்கள் புதன்கிழமை முதல் தங்கிக் கொள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் நிா்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
திருக்கோயிலுக்கு வருகைதரும் பக்தா்கள் இந்த தங்கும் விடுதியில், புதன்கிழமை முதல் (பிப்ரவரி 10) இணையவழி முலமாகஅறைகளைப் பதிவு செய்து கொள்ளலாம்.
முன்பதிவு செய்தவா்களுக்கு மட்டுமே அறைகள் ஒதுக்கப்படும் என்று கோயில் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.