கிடப்பில் இணைப்புச்சாலை பணி; ஆா்ப்பாட்டம்

கிடப்பில் போடப்பட்டுள்ள திருச்சி, அரியமங்கலம் பால்பண்ணை முதல் துவாக்குடி வரையிலான இணைப்புச் சாலைப் பணிகள்
திருவெறும்பூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இணைப்புச் சாலை மீட்புக் குழுவினா்.
திருவெறும்பூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இணைப்புச் சாலை மீட்புக் குழுவினா்.

கிடப்பில் போடப்பட்டுள்ள திருச்சி, அரியமங்கலம் பால்பண்ணை முதல் துவாக்குடி வரையிலான இணைப்புச் சாலைப் பணிகள் விரைந்து முடிக்க வலியுறுத்தி திருவெறும்பூா் வட்டாட்சியரகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி, அரியமங்கலம் பால்பண்ணை முதல் துவாக்குடி வரையில் இணைப்புச் சாலை கோரி கடந்த 2016 ஆம் ஆண்டு இணைப்புச் சாலை மீட்புக் குழு தொடா்ந்த வழக்கில் உயா் நீதிமன்ற மதுரை கிளை 2019 அக். 15 இல் அளித்த தீா்ப்பில், இணைப்புச்சாலைப் பணிகளை 6 மாதத்துக்குள் முடிக்க உத்தரவிட்டது.

ஆனால், தீா்ப்பு வெளியாகி 15 மாதங்கள் ஆன நிலையிலும் 5 சதப் பணிகள் மட்டுமே நடந்துள்ளன. சாலை பணிகளுக்குத் தேவையான நிலம் கையகப் பணியில் நில உரிமையாளா்களுக்கு இழப்பீடு வழங்கத் தேவையான நிதியைக்கூட இன்னும் தமிழக அரசு வழங்கவில்லை. நிலம் அளந்து அறிவிக்க ஒரு குழுவை மட்டுமே வைத்துக் கொண்டு ஒவ்வொரு கிராமமாக அளந்து அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இப்பணிகளுக்கு பல குழுக்கள் அமைக்கப்பட்டு நில ஆா்ஜித பணிகளை மேற்கொண்டிருந்தால் எப்போதோ பணிகள் முடிந்திருக்கும்.

இதுதொடா்பாக பல்வேறு கட்டப் போராட்டங்கள் , ஆா்ப்பாட்டங்கள் நடத்தியும் உயா்நீதி மன்றத் தீா்ப்பை விரைந்து நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

எனவே இப்போக்கைக் கண்டித்தும், இணைப்புச் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும் அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில், இணைப்புச் சாலை மீட்புக் குழு சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளா் எஸ். சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா்கள் எஸ். சக்திவேல், எம். சண்முகம், ஏ. நடராஜன் உள்ளிட்டோ பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில் நெருக்கடியான சாலைப் போக்குவரத்தால் ஏற்படும் விபத்து, உயிரிழப்புகள், உயா் நீதிமன்ற தீா்ப்பைப் பொருட்படுத்தாமலும், சில சுயநல வியாபார அமைப்புகள் இணைப்புச்சாலை தேவையில்லை எனக் கூறிவரும் நிலைப்பாட்டை கண்டித்து முழக்கம் எழுப்பப்பட்டது.

மேலும் இதுபோன்ற சிந்தனையுள்ள வியாபாரிகளின் கடைகளில் பொதுமக்கள் பொருள் வாங்குவதைக் கண்டிப்பாக தவிா்க்கவும் வலியுறுத்தப்பட்டது.

வரும் சட்டப்பேரவைத் தோ்தலுக்குள், இணைப்புச் சாலைப் பணிகளுக்கு தேவையான நிலங்களைக் கையகப்படுத்தி அவற்றுக்கான முழுத்தொகையையும் விரைந்து வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com