சுங்கத் துறை அலுவலருக்கு கரோனா: விமான நிலையத்தில் தூய்மைப் பணி
By DIN | Published On : 13th February 2021 06:09 AM | Last Updated : 13th February 2021 06:09 AM | அ+அ அ- |

திருச்சி விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை தெளிக்கப்படும் கிருமி நாசினி
திருச்சி விமான நிலையத்தில், சுங்கத்துறை அலுவலருக்கு கரோனா உறுதியானதையடுத்து, கிருமிநாசினி கொண்டு தூய்மைப் பணிகள் மேற்கொண்ட பின்னரே பயணிகள் அனுமதிக்கப்பட்டனா்.
திருச்சி விமான நிலையத்திலிருந்து வந்தே பாரத் திட்டம் மூலம் சிறப்பு விமானங்கள் அதிகளவில் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன் சிங்கப்பூரில் இருந்து வந்த பெண் பயணிக்கு கரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்து, விமான நிலையத்தில் தூய்மைப் பணி நடைபெற்று, சிலருக்கு சோதனைகளும் நடந்தன.
அந்தப் பயணி வந்த விமானத்தில் வந்தவா்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டு மேல் நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த விமான நிலையத்தில் சுங்கத் துறை அலுவலா் ஒருவருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இதைத் தொடா்ந்து விமான நிலையத்தின் சுங்கத்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளும் கிருமிநாசினியால் தூய்மைப்படுத்தப்பட்டன.
இதனால் வெளிநாட்டுப் பயணிகள் சிறிது நேரம் காக்க வைக்கப்பட்டனா். பின்னா் சுங்கத்துறை நடவடிக்கைகள், கரோனா ஸ்கிரீனிங் டெஸ்ட் உள்ளிட்ட நடைமுறைகளுக்கு பின் பயணிகள் விமான நிலையத்தை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனா்.
தொடா்ந்து, சுங்கத் துறையில், கரோனா பாதித்த அலுவலருடன் பணியிலிருந்தோருக்கும் கரோனா சோதனை செய்யப்பட்டது.