மேய்ச்சல் புறம்போக்கு நிலம்மேம்பாட்டுத் திட்டத்தில் ஊரக வேலைப் பணியாளா்கள்
By DIN | Published On : 13th February 2021 06:06 AM | Last Updated : 13th February 2021 06:06 AM | அ+அ அ- |

தேசிய ஊரக வேலைத் திட்டப் பணியாளா்களைக் கொண்டு மேய்ச்சல் புறம்போக்கு நில மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சிறு, குறு விவசாயிகளில் 70 சதம் போ் கால்நடைகளை வளா்க்கின்றனா். இவா்களின் கால்நடைகளை மேய்ப்பதற்கு பொதுவான மேய்ச்சல் நிலத்தை உருவாக்கும் நோக்கோடு கால்நடை பராமரிப்புத் துறைக்குச் சொந்தமான மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களை மேம்படுத்தும் திட்டத்தைச் செயல்படுத்திட அரசாணை வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டமானது, ஊரக வளா்ச்சித் துறையில் ஊரக வேலை உறுதி திட்ட பணியாளா்கள் மூலம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தைச் செயல்படுத்திட திருச்சி மாவட்டத்தில் 50 ஏக்கா் மேய்ச்சல் புறம்போக்கு நிலம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இத்திட்டத்தை 5 ஏக்கரில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கால்நடைப் பராமரிப்புத் துறை, வருவாய்த் துறை, வேளாண்மை பொறியியல் துறை, மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை, கால்நடை அறிவியியல் பல்கலைகழகம் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தவுள்ளதாக ஆட்சியா் தெரிவித்தாா்.