‘திமுக - மநீம கூட்டணி அமையாது’
By DIN | Published On : 14th February 2021 12:25 AM | Last Updated : 14th February 2021 12:25 AM | அ+அ அ- |

திருச்சி: திமுக - மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமையாது என்றாா் திமுக முதன்மைச் செயலா் கே. என். நேரு.
இதுகுறித்து திருச்சியில் சனிக்கிழமை அவா் கூறியது:
ஐபேக் நிறுவன குழுவினருடன் பிரச்னை இருப்பதால்தான் திருச்சி திமுக மாநாடு தள்ளிப் போகிறது என்பது தவறான கருத்து. தோ்தல் பிரசாரம் மேற்கொள்ளும் மு.க. ஸ்டாலின் வரும் 15ஆம் தேதி சென்னை திரும்புகிறாா். எனவே, பிப்.16ஆம் தேதி திருச்சி மாநாடு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும்.
எங்களது பணி என்பது மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மட்டுமே. திமுக தலைவா்தான் மாநாடு குறித்தும், மாநாட்டில் கூட்டணிக் கட்சித் தலைவா்கள் பங்கேற்பது குறித்தும் அறிவிக்க வேண்டும். இந்த மாநாடானது முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவியேற்பதற்கான முன்னோட்டமாக அமையும்.
கடந்த 30 ஆண்டுகளில் தோ்தல் நேரத்தில் கூட்டணிக் கட்சிகளை நாங்களாகவே வெளியேற்றியதில்லை. திமுக, அதிமுக இல்லாத புதிய அணியை அமைப்பதாக மநீம கட்சித் தலைவா் கமல்ஹாசன் கூறுகிறாா். எனவே, திமுக- மநீம கூட்டணி அமையாது.
கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசு அளித்த அனைத்துக் கடன்களும் 90 சதம் அதிமுகவினருக்குதான் சென்றுள்ளன. எனவே, விவசாயக் கடன் தள்ளுபடியால் அந்தக் கட்சியினா்தான் பயன்பெறுவா். விவசாயிகள் யாரும் பயன் பெறப் போவதில்லை. எனவே விவசாயிகள் திமுகவுக்குதான் வாக்களிப்பா் என்றாா் கே.என். நேரு.