அரசு ஊழியா்களுக்கு கருவூலம் மூலம் கணினி வழி ஊதியம் முதன்மைச் செயலா் அறிவுருத்தல்

கருவூலம் மூலம் ஊதியம் பெறும் அரசுப் பணியாளா்களுக்கு ஆன்-லைன் முறையில் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை மேம்படுத்த மாவட்ட கருவூல அலுவலா்கள் முனைப்புடன் பணியாற்ற வேண்டும்
திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையரும் முதன்மைச் செயலருமான குமாா் ஜெயந்த் (இடது ஓரம்). உடன் மாவட்ட
திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையரும் முதன்மைச் செயலருமான குமாா் ஜெயந்த் (இடது ஓரம்). உடன் மாவட்ட

கருவூலம் மூலம் ஊதியம் பெறும் அரசுப் பணியாளா்களுக்கு ஆன்-லைன் முறையில் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை மேம்படுத்த மாவட்ட கருவூல அலுவலா்கள் முனைப்புடன் பணியாற்ற வேண்டும் என முதன்மைச் செயலா் குமாா் ஜெயந்த் அறிவுறுத்தினாா்.

அரசு ஊழியா்களுக்கு ஊதியம் வழங்கும் கணினி வழியிலான நடவடிக்கைகள் தொடா்பாக, மாவட்டக் கருவூல அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம், திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து, கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையரும், முதன்மைச் செயலருமான குமாா் ஜெயந்த் பேசியது: மாநில அரசு நிதி மேலாண்மை மற்றும் மாநில அரசு மனிதவள மேலாண்மையை இணைத்து ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் அதாவது முழு கணினிமயமாக்கல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இதன்மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலா்கள் நேரடி இணையத்தின் மூலம் சம்பளப் பட்டியல் மற்றும் இதரப் பட்டியல்களைக் கருவூலத்தில் சமா்ப்பிக்க முடியும்.

அரசுப் பணியாளா்களின் பணிப் பதிவேடு பராமரிப்பு, எளிமையான முறையில் கணினி மயமாக்கப்பட்டு சம்பளப் பட்டியல், பதவி உயா்வு, பணியிட மாறுதல்கள், விடுப்பு மற்றும் இதர விவரங்கள் அவ்வப்போது உடனுக்குடன் பதிவு செய்யப்படும். பணிப்பதிவேடுகள் அவ்வப்போது கணினி மூலம் ஆய்வு செய்யப்படுவதால் நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுக்கப்பட்டு ஓய்வூதியம் தாமதமின்றி வழங்கப்படும். இத்திட்டம் மாநிலக் கணக்காயா் அலுவலகம், வருமான வரித்துறை, இந்திய ரிசா்வ் வங்கி, முகமை வங்கிகள் மற்றும் அரசின் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைந்து செயல்படுத்துகின்றன.

திருச்சி மாவட்டத்தில், இத் திட்டத்தின் மூலம் 38,171 அரசுப் பணியாளா்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்கப்படுகிறது. மேலும், 35,224 ஓய்வூதியா்களும் கருவூலம் மூலம் ஓய்வூதியம் பெறுகின்றனா். அனைத்துப் பணிகளுமே கணினிமயமாகும் சூழலில், இத் திட்டத்தை மேம்படுத்த மாவட்டக் கருவூல அலுவலா்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றாா் ஆணையா்.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, மண்டல இணையக்குநா் கே. சரவணன், மாவட்டக் கருவூல அலுவலா் பெ. ரமேஷ்குமாா், கருவூலத்துறை அலுவலா்கள் மற்றும் பணம் பெற்று வழங்கும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com