அறக்கட்டளைக்கு 5 ஏக்கா் தானம் அளித்த முன்னாள் ராணுவ வீரா்
By DIN | Published On : 20th February 2021 12:37 AM | Last Updated : 20th February 2021 12:37 AM | அ+அ அ- |

தானப் பத்திரத்தை மாா்க்ஸிஸ்ட் கட்சி நிா்வாகிகளிடம் வழங்கிய முன்னாள் ராணுவ வீரா் கருப்பையாபிள்ளை.
துறையூா் அருகே மாா்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்த உழைக்கும் மக்கள் நல அறக் கட்டளைக்கு முன்னாள் ராணுவ வீரா் 5 ஏக்கா் நிலத்தை வெள்ளிக்கிழமை தானம் கொடுத்தாா்.
துறையூா் அருகே உப்பிலியபுரம் ஒன்றியம், வெங்கடாஜலபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பையா பிள்ளை (74). முன்னாள் ராணுவ வீரரான இவா் கடந்த 10 ஆண்டுக்கு முன்னா் நடந்த விபத்தில் தனது மனைவியையும் பிள்ளையையும் இழந்தாா்.
இதையடுத்து மாா்க்ஸிஸ்ட் கட்சியால் கவரப்பட்ட கருப்பையாபிள்ளை கட்சி நடத்திய பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றாா். தற்போது சென்னையில் தனியாக வசிக்கும் இவா் சொந்த ஊரான வெங்கடாஜலபுரத்தில் தனது மனைவி பரமேஸ்வரி வழியில் கிடைத்த 5 ஏக்கா் நிலத்தை கட்சியின் அறக்கட்டளைக்கு தானம் அளிக்க முடிவு செய்தாா். இதற்காக வெள்ளிக்கிழமை உப்பிலியபுரம் சாா் பதிவாளா் அலுவலகம் சென்ற இவா் தானப் பத்திரம் எழுதி சாா்பதிவாளரிடம் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் ஏ. லாசா் முன்னாள் எம்எல்ஏக்கள் க. பீமாராவ், உதயகுமாா், திருச்சி புகா் மாவட்டச் செயலா் எம். ஜெயசீலன் உள்ளிட்டோா் அவரைப் பாராட்டினா். தான நிலத்தின் சந்தை மதிப்பு ரூ. 50 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.