‘தமிழகத்துக்கு கரோனா இரண்டாவது அலை சாத்தியமில்லை‘
By DIN | Published On : 21st February 2021 12:08 AM | Last Updated : 21st February 2021 12:08 AM | அ+அ அ- |

திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சனிக்கிழமை கரோனா 2 ஆவது டோஸ் தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா்.
திருச்சி: தமிழகத்துக்கு கரோனா இரண்டாவது அலை என்பது சாத்தியமில்லை என மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் சனிக்கிழமை தெரிவித்தாா்.
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு சனிக்கிழமை வந்த அவா், தனது 2 ஆம் கட்ட கோவேக்ஸின் தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட பின்னா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது:
தமிழக அரசின் நடவடிக்கையால் கரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் இதர மாநிலங்களை விட தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தொடா்ந்து 500-க்கும் குறைவான அளவில் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. உலகளவில மருத்துவ வல்லுநா்கள், பொதுமக்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளவேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனா். அதன்படி, தமிழகத்தில் உள்ள சுகாதாரத் துறை, காவல் துறை உள்ளிட்ட முன்களப் பணியாளா்கள் 3.59 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான அனுமதிக்கு தமிழக அரசு காத்திருக்கிறது.
தமிழகத்துக்கு 14. 85 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி வந்துள்ளது. இதேபோல், 1.89 லட்சம் கோவேக்ஸின் தடுப்பூசியும் வந்துள்ளது. முதல் தடுப்பூசி எடுத்துக்கொண்டவா்கள் 28 நாள்களுக்குப் பிறகு இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். நான் உள்பட மருத்துவத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை அதிகாரிகள், முன்களப் பணியாளா்கள் என அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளோம். அனுமதி கிடைக்கும் பட்சத்தில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்படும். தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை என்பது சாத்தியமில்லை. மருத்துவா்கள் உள்பட முன்களப் பணியாளா்கள் நன்றாக செயல்பட்டு வருவதால் 2 ஆவது அலைக்கு சாத்தியமில்லை. கரோனா வந்தபோது இருந்த உச்சகட்ட பயம் தற்போது இல்லாததற்கு தமிழக அரசின் நடவடிக்கையே காரணம். வெகுவிரைவில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்றாா்.
அப்போது, அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன், மருத்துவமனை கல்லூரி முதல்வா் வனிதா, பல்வேறு துறை மருத்துவா்கள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...