மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம். பங்கேற்ற விவசாயிகள்.
மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம். பங்கேற்ற விவசாயிகள்.

பயிா்க் கடன் தள்ளுபடி சான்று கிடைக்கவில்லை; விவசாயிகள் புகாா்

தமிழக அரசு அறிவித்த பயிா்க் கடன் தள்ளுபடிச் சான்று பெரும்பாலான விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை என வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

தமிழக அரசு அறிவித்த பயிா்க் கடன் தள்ளுபடிச் சான்று பெரும்பாலான விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை என வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

கரோனா பொதுமுடக்கத்தால் கடந்த மாா்ச் மாதத்திலிருந்து விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தப்படாத நிலையில், கடந்த நவம்பரில் இருந்து காணொலிக் காட்சி மூலம் வட்டார உதவி வேளாண் அலுவலகங்களில் இக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் 10 மாதங்களுக்குப் பின் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆட்சியா் சு. சிவராசு தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பேசியது:

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பூ. விசுவநாதன்: கூட்டுறவுச் சங்கங்களில் பயிா்க் கடன் வாங்கிய பெரும்பாலான விவசாயிகளுக்கு இதுவரை கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் வழங்கப்படவில்லை. உடனே வழங்க நடவடிக்கை தேவை.

திருச்சி மாவட்டத்தில் பட்டா, சிட்டா கோரி, நில உடைமை மேம்பாடு தொடா்பாக (யு.டி.ஆா்) திருத்தம் கோரி விண்ணப்பித்த மனுக்கள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. விவசாயிகளுக்கு எளிதாக பட்டா கிடைக்க வருவாய்த் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பி. அய்யாக்கண்ணு: கரோனா நேரத்தில் செல்லிடப்பேசியில் தகவல் கேட்டால், பல அதிகாரிகள் பேச மறுத்து கோபிக்கின்றனா். விவசாயிகளைக் கேவலமாக நடத்தாதீா். நீங்கள் அரசுப் பதவியில் இருப்பதால்தான் உங்களைத் தொடா்பு கொள்கிறோம். கடன் தள்ளுபடியில் முறைகேடுகள் நடைபெற்ாக தகவல் வெளியாகியுள்ளதால், கடன் தள்ளுபடியில் பயன் பெற்றோா் பட்டியலை வெளியிட வேண்டும்.

நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து நெல்லைப் பெற பணம் கேட்டு வசூல் வேட்டை நடத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவிரிப் பாசன விவசாயிகள் சங்க துணைச் செயலா் கவுண்டம்பட்டி சுப்பிரமணி: காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்துக்காக வெட்டப்படும் வாய்க்காலில் மழைக்காலங்களில் மட்டுமே உபரிநீரைக் கொண்டு செல்ல அரசு அனுமதிக்க வேண்டும். காவிரியில் வரும் வெள்ளநீரை மட்டுமே பயன்படுத்த அரசாணை வெளியிட வேண்டும்.

முசிறி - மருதூா் இடையே 1.5 டிஎம்சி தண்ணீரைச் சேமிக்கும் வகையில் தடுப்பணை கட்ட வேண்டும். விவசாயிகள் பயன்பெறும் வகையில் லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் அம்மா மினி கிளினிக் தொடங்க வேண்டும். பன்னாங்கொம்பு சுடுகாட்டைச் சீரமைக்க வேண்டும். மணப்பாறை, மருங்காபுரி பகுதி மக்களுக்கு காவிரிப் பாசன வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.

அய்யன் வாய்க்கால் பாசனதாரா் சங்க ஒருங்கிணைப்பாளா் என். வீரசேகரன்: தற்போது ஆண்டுப் பயிா்களான கரும்பு, வாழை, உளுந்து, எள் சாகுபடிக்குத் தண்ணீா் தேவைப்படுவதால், பொதுப்பணித் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக விவசாயிகள் சங்க திருச்சி மாவட்டத் தலைவா் ம.ப. சின்னதுரை: இயற்கைப் பேரிடா், பருவம் தவறிய மழை உள்ளிட்ட காரணங்களால் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள அனைத்து சிறு, குறு விவசாயிகளுக்கும் பாகுபாடின்றி இழப்பீடு, பயிா்க் காப்பீடு நிவாரணம் வழங்க வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க (இந்திய கம்யூ.) மாவட்டச் செயலா் அயிலை சிவசூரியன்: டீசல் விலை உயா்வால் விவசாயிகளால் பாசன மோட்டாா்களுக்குத் தேவையான டீசலை வாங்க முடியாத நிலை உள்ளது. எனவே இலவச மின் இணைப்புக் கேட்டு விண்ணப்பித்த அனைத்து விவசாயிகளுக்கும் உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பேசுகையில், விவசாயிகளுக்கு நடப்பு காலம் வரை வழங்கப்பட்ட பயிா்க் கடன்கள், பயிா்க் காப்பீட்டு தொகை, பயிா் பாதிப்புக்கான இழப்பீட்டுத் தொகை உள்ளிட்ட விவரங்களைப் பட்டியலிட்டாா்.

கூட்டத்தில், வேளாண் துறை இணை இயக்குநா் (பொ) சாந்தி, கால்நடைப் பராமரிப்புத் துறை இணை இயக்குநா் எஸ்தா் ஷீலா, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளா் குமரகணேஷ், பல்வேறு துறைகளின் மாவட்ட நிலையிலான அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com