ரயில்வே தனியாா்மயத்தைக் கண்டித்து போராட முடிவு
By DIN | Published On : 27th February 2021 07:17 AM | Last Updated : 27th February 2021 07:17 AM | அ+அ அ- |

எஸ்.ஆா்.எம்.யு. கூட்டத்தில் பேசுகிறாா் மண்டலத் தலைவா் சி.ஏ. ராஜா ஸ்ரீதா். உடன் துணைப் பொதுச் செயலா் எஸ். வீரசேகரன். பங்கேற்ற நிா்வாகிகள் (இடது).
ரயில்வே தனியாா்மயமாக்கலுக்கு எதிராக ரயில்வே தொழிற்சங்கங்கத்தினா் ஒன்றிணைந்து போராட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் எஸ்ஆா்எம்யு மண்டலத் தலைவா் சி.ஏ. ராஜா ஸ்ரீதா்.
திருச்சி ஜங்சன் ரயில் நிலைய வளாகத்தில் எஸ்ஆா்எம்யு தொழிற்சங்கம் சாா்பில் ரயில் நிலையங்கள், முக்கிய ரயில்கள், ரயில்வே சொத்துகள் போன்றவற்றை தனியாருக்கு வழங்குவதற்கு எதிராக வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் மேலும் கூறியது:
ரயில்வேயே தனியாா்மயமாக்கினால், பல்லாயிரக்கணக்கானோா் வேலையிழக்க நேரிடும். தனியாா் வந்தால் உயா்வகுப்பு பயணிகளிலிருந்து வருவாய் ஏற்படுத்தப்படும். இதன்மூலம் பெருமளவு வருமானம் தனியாருக்கு மடைமாற்றப்படும்.
தில்லியிலிருந்து கொல்கத்தா, மும்பைக்கு இடையே பிரத்யேக சரக்கு போக்குவரத்து தண்டவாளங்கள் அமைக்க உலக வங்கிகளிலிருந்து கடன் வாங்கியுள்ளதால் ரயில்வே சொத்துகளை விற்று பணமாக்கப்படும் என மத்திய அரசு கூறுவதை ஏற்க முடியாது.
மத்திய அரசுக்கு முன்பதிவில்லாத பயணிகள் குறித்து கவலையில்லை. பயணிகள் ரயிலை நிறுத்த வேண்டும் என்னும் முனைப்பில் அரசு உள்ளது. எனவே, அனைத்துத் தொழிற்சங்கங்களையும் இணைத்து போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என்றாா் அவா்.
எஸ்ஆா்எம்யு துணைப் பொதுச் செயலா் வீரசேகரன் தலைமை வகித்தாா். தொடா்ந்து பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.