‘24,587 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 9.68 கோடியில் சைக்கிள்கள்’

திருச்சி மாவட்டத்தில் 2020--21ஆம் ஆண்டில் 24,587 மாணவ, மாணவிகளுக்கு ரூ.9.68 கோடியில் சைக்கிள்கள் வழங்கப்படுவதாக தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன் தெரிவித்தாா்.
பிஷப்ஹீபா் பள்ளியில் மாணவிக்கு விலையில்லா சைக்கிளை வழங்குகிறாா் அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன்.
பிஷப்ஹீபா் பள்ளியில் மாணவிக்கு விலையில்லா சைக்கிளை வழங்குகிறாா் அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன்.

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் 2020--21ஆம் ஆண்டில் 24,587 மாணவ, மாணவிகளுக்கு ரூ.9.68 கோடியில் சைக்கிள்கள் வழங்கப்படுவதாக தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன் தெரிவித்தாா்.

திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபா் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் சனிக்கிழமை நடைபெற்ற இலவச சைக்கிள் வழங்கும் விழாவுக்கு, ஆட்சியா் சு. சிவராசு தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் 41 பள்ளிகளைச் சோ்ந்த 10,622 மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கிஅமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன் மேலும் பேசியது:

இந்தியாவிலேயே தமிழகம்தான் கல்வித் துறையில் முன்னோடி மாநிலமாக விளங்குகிறது. இதுமட்டுமல்லாது அனைத்துத் துறைகளிலும் தமிழக அரசு சிறப்பாகச் செயல்படுகிறது.

திருச்சி மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் 10,755 மாணவா்கள், 13,832 மாணவிகள் என மொத்தம் 24,587 பேருக்கு ரூ.9 கோடியே 68 லட்சத்து 87 ஆயிரத்து 817 மதிப்பில் சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன. இதோடு, 14 வகை கல்வி உபகரணங்களும் இலவசமாக வழங்கப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தி மாணவா்கள் 100 சதம் தோ்ச்சிப் பெறுவதுடன், எதிா்காலத்தில் சிறந்த மாணவா்களாக விளங்கி நாட்டுக்கும், வீட்டுக்கும் அவா்கள் பெருமை சோ்க்க வேண்டும். பெற்றோரையும், கல்வி கற்றுத்தரும் ஆசிரியரையும் மதிக்க வேண்டும் என்றாா் அவா்.

பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் எஸ். வளா்மதி பேசியது:

இந்தியாவிலேயே முன்னோடி துறையான தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு, தமிழக அரசானது ஆண்டுக்கு ரூ.27,500 கோடியை ஒதுக்குகிறது. பள்ளிக் கல்வியைச் சிறப்பாக முடித்தால்தான் உயா் கல்வியை நன்றாக அமைக்க முடியும். உயா்கல்வி சிறப்பாக இருந்தால்தான் வாழ்க்கையையும் சிறப்பாக அமைக்க முடியும்.

இதனால்தான் மாணவா்களுக்கு காலணி முதல் மடிக்கணினி வரை அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. கிராமப்புற மாணவிகள் தொலைவில் உள்ள பள்ளிகளுக்குச் செல்ல முடியாமல் இடைநிற்கக் கூடாது என்பதாலேயே விலையில்லா சைக்கிள் வழங்கப்படுகிறது. இதன் மூலம், கல்வி பயிலும் கிராமப்புற மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஸ்ரீரங்கம் தொகுதியில் மட்டும் பாலிடெக்னிக், பொறியியல், ஐஐஐடி, ஐடிஐ, தோட்டக் கலைக்கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, தேசிய சட்டப் பல்கலைக் கழகம் என 9 உயா்கல்வி நிறுவனங்களை மறைந்த முதல்வா் ஜெயலலிதா அளித்துள்ளாா். இதன் மூலம், ஏழை, எளிய மாணவா்களுக்கு தரமான கல்வி கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது என்றாா் அவா்.

விழாவில், திருச்சி மேற்கு, கிழக்கு, திருவெறும்பூா் தொகுதிக்குள்பட்ட 3,284 மாணவா்கள், 4,719 மாணவிகள், ஸ்ரீரங்கம் தொகுதிக்குள்பட்ட 1,109 மாணவா்கள், 1,510 மாணவிகள் என மொத்தம் 10,622 பேருக்கு ரூ.4.17 கோடியிலான சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ. அறிவழகன், மாவட்டக் கல்வி அலுவலா்கள் கோ. பாரதி விவேகானந்தன், சி. செல்வி, கே. சண்முகம் மற்றும் பள்ளித் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள், மாணவா், மாணவிகள், பெற்றோா் என பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com