ஜங்ஷன் மேம்பாலப் பணிகள் மீண்டும் தொடக்கம்?

திருச்சியில் கிடப்பில் போடப்பட்ட ஜங்ஷன் மேம்பாலப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை மீண்டும் தொடங்க ஒப்பந்த அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
மன்னாா்புரம் பகுதியில் பணிகள் முடியாமல் நிறுத்தப்பட்டுள்ள பாலம்.
மன்னாா்புரம் பகுதியில் பணிகள் முடியாமல் நிறுத்தப்பட்டுள்ள பாலம்.

திருச்சியில் கிடப்பில் போடப்பட்ட ஜங்ஷன் மேம்பாலப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை மீண்டும் தொடங்க ஒப்பந்த அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

திருச்சி ஜங்சன் மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், கடந்த 2014 ஆம் ஆண்டு குறுகிய ஜங்ஷன் மேம்பாலத்துக்குப் பதிலாக புதிய மேம்பாலம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கி பணிகளைத் தொடங்கியது.

இதன்படி அரிஸ்டோ மேம்பாலத்திலிருந்து திண்டுக்கல்-மதுரை நெடுஞ்சாலை, மத்தியப் பேருந்து நிலையம், ரயில் நிலையம், கல்லுக்குழி, மாவட்ட ஆட்சியரகம் உள்ளிட்ட பகுதிகளுக்கான இணைப்புச் சாலை, பழைய திருவள்ளுவா் பேருந்து நிலையம், மன்னாா்புரம் நான்கு வழிச்சாலை என 7 வழிகளை இணைக்கும் திட்டமாகத் தொடங்கப்பட்டது.

ஆனால், அரிஸ்டோ மேம்பாலத்திலிருந்து மன்னாா்புரம் 4 வழிச்சாலையை இணைக்கும் மேம்பாலம் ராணுவப்பகுதி வழியாகச் செல்வதால் மத்திய பாதுகாப்புத் துறையிடமிருந்து உரிய அனுமதி கிடைக்காமல் கடந்த 7 ஆண்டுக்கு மேலாக பணி கிடப்பில் போடப்பட்டது.

ராணுவப்பகுதியில் வரும் சுமாா் 0.66 ஏக்கருக்கு மாற்றாக இடம் அளிக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்திருந்தது. இருப்பினும் இத்திட்டப்பணிகள் காலதாமதமாகி வந்தது.

இந்நிலையில், ராணுவப்பகுதிக்கு எதிரேயுள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படைக்குச் சொந்தமான இடத்தை மாற்று இடமாகத் தர தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த இடத்துக்கு மத்திய பாதுகாப்புத் துறை அனுமதி அளித்தவுடன் கிடப்பில் உள்ள மேம்பாலப்பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது.

இப்பணிகளுக்கான ஒப்பந்த அறிவிக்கையை நெடுஞ்சாலைத்துறை தற்போது வெளியிட்டுள்ளது. இதில், மீதமுள்ள மேம்பாலப்பணிகளுக்கு ரூ 2.93 கோடி என நிா்ணயிக்கப்பட்டு அடுத்த 9 மாதங்களுக்குள் பணிகளை நிறைவு செய்ய நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com