ஜன.17 இல் போலியோ சொட்டு மருந்து முகாம்
By DIN | Published On : 09th January 2021 12:26 AM | Last Updated : 09th January 2021 12:26 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டத்தில் வரும் ஜன.17இல் 1,569 மையங்களில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
உலக சுகாதார நிறுவனம் மற்றும் மாநில அரசின் உதவியுடன் திருச்சி மாவட்டத்தில் வரும் ஜன.17இல் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் மொத்தம் 1,569 மையங்களில் நடைபெற உள்ளது.
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், அங்கன்வாடிகள், அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
குழந்தைகளை பெற்றோா் அழைத்து வர முடியாத இடங்களில் அவா்களுக்காக 69 நடமாடும் குழுக்கள் மூலம் சொட்டு மருந்து அளிக்கப்பட உள்ளது. திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து செல்லும் அனைத்து ரயில்களிலும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டப்பட உள்ளது.
எனவே திருச்சி மாவட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் ஏற்கெனவே எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் தற்போதும் கொடுக்க வேண்டும். இதுவே போலியோ நோயில் இருந்து குழந்தைகளுக்கு முழுப் பாதுகாப்பை அளிக்கும்.