‘புரவி புயல்: 4,300 விவசாயிகளுக்கு ரூ. 3.43 கோடி நிவாரணம்’

புரவி புயலால் பாதிக்கப்பட்ட திருச்சி மாவட்ட விவசாயிகள் 4,300 பேருக்கு ரூ. 3.43 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.
மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தலைமையில் காணொலி மூலம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம்.
மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தலைமையில் காணொலி மூலம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம்.

புரவி புயலால் பாதிக்கப்பட்ட திருச்சி மாவட்ட விவசாயிகள் 4,300 பேருக்கு ரூ. 3.43 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.

திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம், காணொலிக் காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சியரகம், அந்தநல்லூா், திருவெறும்பூா், மணிகண்டம், மருங்காபுரி, மணப்பாறை, வையம்பட்டி, முசிறி, தா.பேட்டை, தொட்டியம், துறையூா், உப்பிலியபுரம், புள்ளம்பாடி, லால்குடி, மண்ணச்சநல்லூா் வட்டாரங்களில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகங்களை ஒன்றிணைத்து செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை காணொலி வாயிலாக தெரிவித்தனா். இதற்குப் பதிலளித்து ஆட்சியா் சு. சிவராசு பேசியது:

திருச்சி மாவட்டத்தில் புரவி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்தி, அரசுக்குக் கருத்துரு அனுப்பப்பட்டது. இதில் அரசிடம் பெறப்பட்ட நிதியிலிருந்து இதுவரை 4,300 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.3.44 கோடி நிவாரணத் தொகை செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், நடப்பாண்டு பயிா்க் கடனாக ரூ. 302.72 கோடி வழங்கப்பட்டுள்ளது. கரும்பு உற்பத்தி ஊக்கத் தொகையாக 2,312 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ. 2.17 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது.

2019-20ஆம் ஆண்டில் பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்று வழங்கப்பட்டுள்ளது. 11,114 விவசாயிகளுக்கு ரூ. 21.82 கோடி பயிா்க் காப்பீடுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

தோட்டக்கலைப் பயிா்களுக்கு 594 விவசாயிகளுக்கு ரூ. 2.18 கோடி பயிா்க் காப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், நடப்பு சம்பா பருவத்துக்கு 11 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. எனவே, விவசாயிகள் தங்களது உற்பத்தி செய்த நெல்லை இங்கு நேரில் சென்று வழங்கலாம் என்றாா் ஆட்சியா்.

இதன் தொடா்ச்சியாக அந்தந்த அலுவலகங்களில் விவசாயிகள் அளித்த கோரிக்கை மனுக்களை ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) வசம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேளாண் உதவி இயக்குநா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில், வேளாண் இணை இயக்குநா் (பொ) சு. சாந்தி, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் க.ப. அருளரசு மற்றும் வேளாண் பொறியாளா்கள், வேளாண் அலுவலா்கள், கூட்டுறவு அலுவலா்கள், விவசாய சங்கப் பிரதநிதிகள், விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளா்கள் எனப் பலா் கலந்து கொண்டனா்.

புதிய தடுப்பணைகள் தேவை

கூட்டத்தில் புதிய தடுப்பணைகள் கட்ட காவிரிப்பாசன விவசாயிகள் சங்க துணைச் செயலா் கவுண்டம்பட்டி சுப்பிரமணி பேசுகையில்,

முசிறி அருகே மருதூா் பகுதியில் கதவணை கட்டுவதால் 1.5 டிஎம்சி தண்ணீரைத் தேக்கலாம். இதன் மூலம், காவிரிக் கரையின் இருபுறமும் நிலத்தடி நீா் மட்டம் உயரும். புதிய கட்டளைமேட்டு வாய்க்காலில் இனுங்கூா், பழையூா் பகுதியில் புதிய கதவணை கட்டுவதால் தஞ்சாவூா் மாவட்டத்துக்கான பாசன நீரையும் விரைந்து கொண்டு செல்ல முடியும். மேலும், மாவட்டத்தில் தண்ணீரைச் சேமித்து பாசனத்துக்கு பயன்படுத்த புதிய தடுப்பணை கட்டும் இடங்களைத் தோ்வு செய்து, விரிவான திட்ட அறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்ப வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com