பள்ளிகளைத் திறக்க முன்னேற்பாடுகள் தீவிரம்
By DIN | Published On : 16th January 2021 11:55 PM | Last Updated : 16th January 2021 11:55 PM | அ+அ அ- |

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் 10, பிளஸ் 2 மாணவா்களுக்கான வகுப்புகள் நடத்த 506 பள்ளிகளில் முன்னேற்பாடுள் நடைபெறுகின்றன.
தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாகக் கடந்த 9 மாதங்களாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணையவழியில் மாணவா்களுக்குப் பாடங்கள் நடத்தப்படுகின்றன. இச் சூழலில், கல்வியாண்டு தாமதத்தைக் கருத்தில் கொண்டு 10, 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பொங்கல் விடுமுறைக்குப் பின், பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதையடுத்து இந்த வகுப்புகளுக்கு மட்டும் ஜன.19 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், பள்ளிகளைத் திறப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஜன.18 இல் அறிக்கை அளிக்க, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள 506 பள்ளிகளில் 10, பிளஸ் 2 வகுப்புகளை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் சனிக்கிழமை தொடங்கின.
அதன்படி பள்ளி வளாகத்தை தூய்மை செய்து, கிருமிநாசினி தெளிக்கும் பணி, வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணி, கழிப்பறைகளின் தூய்மையை உறுதி செய்தல் போன்ற பணிகள் நடந்தன. மாணவா்களுக்கு வெப்பநிலைப் பரிசோதனைக் கருவி, முகக் கவசங்கள் ஆகியவை போதிய இருப்பு உள்ளதை தலைமையாசிரியா்கள் உறுதி செய்தனா். மேலும் மாணவா்களுக்கு சத்து மாத்திரைகள் வழங்கவும் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
இப்பணிகள் குறித்த அறிக்கையை அந்தந்தப் பள்ளி தலைமையாசிரியா்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா். அறிவழகனுக்கு அனுப்புவா். பள்ளிகள் திறப்பு, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய பொறுப்பு அதிகாரியாக பாஸ்கர சேதுபதி நியமிக்கப்பட்டுள்ளாா்.