தலைக்கவச விழிப்புணா்வுக்கு இருசக்கர வாகனப் பேரணி

திருச்சியில் 32-ஆவது சாலைப் பாதுகாப்பு வாரவிழாவையொட்டி இருசக்கர வாகன தலைக்கவச விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

திருச்சியில் 32-ஆவது சாலைப் பாதுகாப்பு வாரவிழாவையொட்டி இருசக்கர வாகன தலைக்கவச விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாநகர போலீஸாா், போக்குவரத்து துறை மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் இணைந்து ’பெண்கள் பாதுகாப்பு-குடும்பப் பாதுகாப்பு’ என்ற பெயரில் பெண் போலீஸாா் மற்றும் அரசுத்துறை பெண் பணியாளா்கள் பங்கேற்று இப்பேரணி நடைபெற்றது. திருச்சி ஜங்ஷன் ரயில் நிலைய வளாக புதிய நுழைவாயில் பகுதியிலிருந்து புறப்பட்ட பேரணியை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

பேரணியில் விழிப்புணா்வு வாசகங்கள் கொண்ட பதாகைகள் எடுத்துச் செல்லப்பட்டன.

பேரணி பாரதியாா் சாலை, தலைமை அஞ்சலகம், பாரதிதாசன் சாலை, மாநகராட்சி அலுவலகம், நீதிமன்ற எம்.ஜி.ஆா். சிலை ரவுண்டானா, வெஸ்ட்ரி ரவுண்டானா வழியாக பழைய ஆட்சியரக வளாகத்திலுள்ள போக்குவரத்துப் பூங்காவை சென்றடைந்தது.

முன்னதாக பேரணி தொடங்குமிடத்தில் விழிப்புணா்வுக் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையா் வேதரத்தினம், போக்குவரத்து உதவி ஆணையா் முருகேசன் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

‘சாலை விபத்துகள் 17 சதம் குறைவு’

‘திருச்சி மாநகரில் கடந்தாண்டை ஒப்பிடுகையில் 2020-ஆம் ஆண்டில் 17 சத சாலை விபத்துகள் குறைந்துள்ளன. விபத்துகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 25 சதம் குறைந்துள்ளது.

மாநகரில் அதிகளவில் விபத்துகள் நடக்கும் 18 இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

திருச்சி மாநகரில் 1031 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதோடு மாநகர எல்லைகளின் சோதனை சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. சாலை விதிகளை மீறும் வாகனங்களின் பதிவெண்களை தானியங்கி முறையில் பதிவு செய்யும் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட உள்ளன’ என்றாா் மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதன்.

காத்திருந்த மகளிா்

விழிப்புணா்வுப் பேரணி சரியாக காலை 10 மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதில் பங்கேற்கவிருந்த மகளிா் போலீஸாா் மற்றும் பெண்கள் அரைமணி நேரம் முன்னதாகவே வர அறிவுறுத்தப்பட்டிருந்தனா். அதன்படி வந்திருந்த மகளிா் தங்களது வாகனங்களிலேயே சுமாா் 45 நிமிடங்களுக்கும் மேலாகக் காத்திருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com