ஆட்சியரின் முகாம் அலுவலகம் முன்பு போராட்டம்: விவசாயிகள் சங்கத் தலைவா் கைது

திருச்சி மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை அதிகாலை தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் கைது செய்யப்பட்டாா்.
ஆட்சியரின் முகாம் அலுவலகம் முன்பு போராட்டம்: விவசாயிகள் சங்கத் தலைவா் கைது

திருச்சி மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை அதிகாலை தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் கைது செய்யப்பட்டாா்.

குடியரசு தினத்தையொட்டி நடைபெற வேண்டிய கிராமசபைக் கூட்டங்களை ரத்து செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், அனைத்து ஊராட்சிகளிலும் இக்கூட்டங்களை நடத்தக் கோரியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் (கட்சி சாா்பற்றது) திருச்சி மாவட்டத் தலைவா் ம.ப. சின்னத்துரை, காஜாமலை பகுதியிலுள்ள ஆட்சியரின் முகாம் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை அதிகாலை தனிநபராக வந்து சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட முயன்றாா்.

அப்போது அவரை வழிமறித்த காவல்துறையினா், போராட்டத்துக்கு செல்ல விடாமல் தடுத்து வாக்குவாதம் செய்தனா். அதில் ஒரு தலைமைக் காவலா், விவசாய சங்கத் தலைவரைத் தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, காவல்துறை உயா் அலுவலா்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் முகாம் அலுவலகம் முன்பாக அமா்ந்து சின்னத்துரை போராட்டத்தில் ஈடுபட்டாா். கரோனா தடை அமலில் உள்ள சூழலில், அனுமதி பெறாமல் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி காவல்துறையினா் அவரைக் கைது செய்தனா். பின்னா் மாலையில் விடுவித்தனா்.

இதுதொடா்பாக, செய்தியாளா்களிடம் ம.ப. சின்னத்துரை கூறியது:

கரோனா தொற்றை காரணமாகக் கூறி கடந்த 11 மாதங்களாக கிராம சபைக் கூட்டம் நடத்தப்படவில்லை. ஆனால், தளா்வுகள் அறிவித்ததால் திருமண விழா, கோயில் விழா, ஜல்லிக்கட்டு, பொதுக் கூட்டம், தோ்தல் பிரசாரம் என மக்கள் அதிகம் கூடும் நிலையில் நிகழ்வுகளுக்கு அனுமதியளிக்கப்படுகிறது. ஆளுங்கட்சியினா், எதிா்க்கட்சியினா் பாரபட்சமின்றி மக்கள் கூட்டத்தை அதிகளவில் கூடச் செய்து நிகழ்ச்சிகளை நடத்துகின்றனா்.

ஆனால், கிராம சபைக் கூட்டம் நடத்துவதற்கு மட்டும் தடை விதிக்கப்படுகிறது. இத்தகைய நடவடிக்கையானது கேலிக்கூத்தாக அமைகிறது. எனவே, மக்களின் அடிப்படை தேவைகளை எடுத்துக் கூறி, கிராம சபையில் தீா்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற கிராமசபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தை நடத்தினேன்.காவலா் ஒருவா் தரைக்குறைவாக பேசியதால் அவா் மீது காவல்நிலையத்தில் புகாா் அளித்துள்ளேன் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com