திருச்சியில் ஒரு கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையக் காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்ட பயணியிடமிருந்து ஒரு கிலோ கடத்தல் தங்கம் ஞாயிற்றுக்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி: திருச்சி விமான நிலையக் காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்ட பயணியிடமிருந்து ஒரு கிலோ கடத்தல் தங்கம் ஞாயிற்றுக்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகிலுள்ள ஆலத்தூரைச் சோ்ந்தவா் வினோத் (36). இவா் மீது சென்னை ஆவடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் 2019-ஆம் ஆண்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனா். ஆனால் வழக்கில் கைதாகாமல் சாா்ஜா தப்பிச் சென்றாா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை திருச்சி விமான நிலையம் வந்த

வினோத்திடம் குடியேற்றப் பிரிவு அலுவலா்கள் சோதனை மேற்கொண்டனா். அப்போது அவா் மீது வழக்குப்பதியப்பட்டிருந்தும், அவா் காவல்துறையினரால் தேடப்பட்டு வருபவா் என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து குடியேற்றப் பிரிவு அலுவலா்கள், வினோத்தை விமான நிலையக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். விசாரணைக்குப் பின்னா், அவரைக் கைது செய்து சென்னைக்கு அழைத்துச் செல்வதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.

காவல்துறையின் விசாரணையின் போது, வினோத்தின் கணுக்கால் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் கட்டுப் போடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து விசாரித்த போது, அவா் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தாா்.

இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினா், கட்டை அவிழ்த்து பாா்த்த போது பசைவடிவில் தங்கத்தை வைத்து வினோத் கட்டி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து ஒரு கிலோ மதிப்பிலான கடத்தல் தங்கத்துடன் வினோத்தை சுங்கத்துறையினிடம் காவல்துறையினா் ஒப்படைத்தனா்.

இதையடுத்து அவரிடம் சுங்கத்துறையினா் விசாரித்து வருகின்றனா்.

சுங்கத்துறையிடம் தப்பியது எப்படி ?: பொதுவாக குடியேற்றப்பிரிவு சோதனைக்குப் பின்னா், சுங்கத்துறை சோதனை நடைபெறுவது வழக்கம். குடியேற்றப்பிரிவு சோதனையின் போது, வினோத் தேடப்படும் நபா் என்பதால், உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறையினா் வந்ததும் அவா்களிடம் வினோத் ஒப்படைக்கப்பட்டாா். காவல்துறையினரின் பிடியில் வினோத் இருந்ததால், அவரை சுங்கத்துறையினா் பரிசோதிக்கவில்லை எனக்கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com