நாளை 1,569 மையங்களில் போலியோ சொட்டு மருந்து
By DIN | Published On : 30th January 2021 12:39 AM | Last Updated : 30th January 2021 12:39 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டத்தில் 1,569 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெறுகிறது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு கூறியது:
திருச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள முகாமில் 2.62 லட்சம் குழந்தைகள் பயன் பெறவுள்ளனா். அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் முகாமுக்காக கிராமப்புறங்களில் 1,279, மாநகராட்சியில் 247, துறையூா் நகராட்சியில் 20, மணப்பாறை நகராட்சியில் 23 என மொத்தம் 1,569 மையங்கள் தயாா் செய்யப்பட்டுள்ளன.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மாநகராட்சி நகா்நல மையங்கள் சொட்டு மருந்து வழங்கப்படும்.
பிரசித்தி பெற்ற கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் அனைத்து பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையம், முக்கொம்பு உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் என 55 இடங்களைத் தோ்வு செய்தும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
குழந்தைகளை அழைத்து வர இயலாத மலைப்பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 69 நடமாடும் குழுக்கள் மூலம் சொட்டு மருந்து வழங்கப்படும். ரயில்வே நிா்வாகத்துடன் இணைந்து அனைத்து ரயில்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.
எனவே, திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 5 வயதுக்குள்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டும். ஏற்கெனவே எத்தனை முறை வழங்கியிருந்தாலும் மீண்டும் வழங்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.