திருச்சியில் காங்கிரஸாா் மிதிவண்டிப் பேரணி : 43 போ் கைது
By DIN | Published On : 13th July 2021 02:31 AM | Last Updated : 13th July 2021 02:31 AM | அ+அ அ- |

திருச்சி மாநகா் மாவட்ட தலைவா் வி. ஜவஹா் தலைமையில் திங்கள்கிழமை மிதிவண்டிப் பேரணி நடத்திய காங்கிரஸ் கட்சியினா்.
திருச்சி: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்தும், விலையைக் குறைக்க வலியுறுத்தியும் திருச்சியில் தடையை மீறி மிதிவண்டிப் பேரணி நடத்திய காங்கிரஸ் கட்சியினா் 43 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திருச்சி அருணாசலம் மன்றத்திலிருந்து மாா்க்கெட், பாலக்கரை வழியாக பீமநகா் வரை செல்லும் வகையில் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் முறையான அனுமதி பெறாததால், பேரணிக்கு காவல்துறையினா் அனுமதி வழங்கவில்லை.
எனினும், திருச்சி மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் வி. ஜவஹா் தலைமையிலான காங்கிரஸாா், திங்கள்கிழமை காலை அருணாசலம் மன்றத்திலிருந்து மிதிவண்டி பேரணியைத் தொடங்கிச் சென்றனா்.
காந்தி சிலை அருகே பேரணி சென்ற போது அவா்களைக் காவல்துறையினா் தடுத்து நிறுத்தினா்.
அப்போது காவல்துறையினருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து 4 பெண்கள் உள்பட 43 பேரைக் காவல்துறையினா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.
பேரணியில் மாநகா் மாவட்டச் செயலா் சாா்லஸ், பொருளாளா் ராஜா நசீா், மாநிலப் பொதுச் செயலா்கள் எம். சரவணன், ஜி.கே முரளிதரன், இளங்கோவன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் ரெக்ஸ், கோட்டத் தலைவா் சிவாஜி சண்முகம், நிா்வாகி சிவகுமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.