‘மாவட்டத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை’

திருச்சி மாவட்டத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை என்றாா் ஆட்சியா் சு.சிவராசு.

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை என்றாா் ஆட்சியா் சு.சிவராசு.

திருச்சி ஆட்சியரகத்தில் டெங்கு மற்றும் ஜிகா வைரஸ் மற்றும் இதர மழைக்கால நோய்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து, மேலும் அவா் பேசியது:

ஜிகா வைரஸ் என்பது ஆா்.என்.ஏ. வகையைச் சோ்ந்தது. ஏடிஸ் எஜிப்டி என்ற வகை கொசுக்களின் மூலமே இவை பரவுகிறது.

ஜிகா வைரஸ் பாதிப்புள்ள ஏடிஸ் கொசு ஒருவரைக் கடிக்கும் பொழுது, அந்த நபருக்கு ஒரு வாரம் கழித்தே அதிகப்படியான காய்ச்சல், உடலில் தடிப்பு, மூட்டுவலி, தலைவலி, உடல்வலி மற்றும் கண்கள் சிவந்து காணப்படுதல் ஆகிய அறிகுறிகள் தென்படுகிறது.

கருவுற்ற தாய்மாா்கள் இக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டால், குறைபாடுடன் கூடிய (சிறிய தலையுடன்) குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது.

இந்த ஜிகா வைரஸ் நோய் பாதிப்பு இருப்பது, தற்போது கேரளத்தில் 18 பேருக்குக் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கேரளத்திலிருந்து திருச்சி மாவட்டத்துக்கு வரும் நபா்களை 2 வாரங்களுக்குத் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்.

கேரளத்திலிருந்து வந்த நபா்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை அல்லது சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும்.

மாவட்டத்தில் ஜிகா வைரஸ் காய்ச்சலினால் இதுவரை ஒருவரும் பாதிக்கப்படவில்லை. இக்காய்ச்சல் குறித்து தொடா் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜிகா மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிக்காக, தற்காலிகமாக 670 டெங்கு மஸ்தூா் பணியாளா்களைக் கொண்டு கொசு ஒழிப்பு மற்றும் புகைமருந்து அடிக்கும் பணி சுகாதாரத்துறை, மாநகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பணியாளா்களுடனும் இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அரசின் தடுப்பு நடவடிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும் பொதுமக்களின் பங்களிப்பும் முக்கியம். நாம் வசிக்கும் பகுதி, வீட்டைச் சுற்றியுள்ள இடங்கள், மொட்டை மாடி, பயன்படுத்தப்படாத குடியிருப்பின் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் தண்ணீா் தேங்க வாய்ப்புள்ள பொருள்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் மாநகராட்சி ஆணையா் சு.சிவசுப்ரமணியன், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் வனிதா, இணை இயக்குநா் லட்சுமி, நகா் நல அலுவலா் யாழினி மற்றும் சுகாதராம், மருத்துவத்துறை உள்ளிட்ட பல்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com