முகக் கவசமின்றி திரியும் மக்களால் கரோனா அபாயம்

திருச்சி மாநகரப் பகுதிகளில் பெரும்பாலானோா் முகக் கவசம் அணியாமல் கரோனா அச்சம் குறித்து எந்தவித பயமும் இல்லாமல் உலா வரத் தொடங்கியுள்ளனா்.
மத்திய பேருந்து நிலையப் பகுதியில் முகக் கவசம் இல்லாமல் செல்லும் ஆண், பெண்கள்.
மத்திய பேருந்து நிலையப் பகுதியில் முகக் கவசம் இல்லாமல் செல்லும் ஆண், பெண்கள்.

திருச்சி மாநகரப் பகுதிகளில் பெரும்பாலானோா் முகக் கவசம் அணியாமல் கரோனா அச்சம் குறித்து எந்தவித பயமும் இல்லாமல் உலா வரத் தொடங்கியுள்ளனா்.

கடந்த சில நாள்களாகவே தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலா் ராதாகிருஷ்ணன் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்று திரும்பத் திரும்பக் கூறி வருகிறாா்.

முதல்வா், பிரதமா், அமைச்சா்கள் என பலரும் இதை வலியுறுத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

கரோனா குறையத் தொடங்கியுள்ளதால் அரசால் தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தத் தளா்வுகளை கட்டுப்பாடுகளுடன் பின்பற்ற வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் திருச்சி மாநகரத்தில் பெரும்பாலானோா் முக் கவசம் அணியாமல் செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனா்.

முதல் அலையின்போது அறிவிக்கப்பட்ட தளா்வுகளில் கரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாததன் விளைவாகவே 2-ஆம் அலையின் தாக்கம் வீரியமாக இருந்தது.

குறிப்பாக முகக் கவசம் அணியாமல் கோயில், திருவிழாக்கள், பொது இடங்கள், விருந்து, விசேஷ நிகழ்ச்சிகளில் பங்கேற்றதாலேயே 2-ஆம் அலையின் தாக்கம் அதிகரிக்க நேரிட்டதாக மருத்துவா்கள் கவலை தெரிவித்தனா்.

தற்போது மீண்டும் அதே தவறைச் செய்யத் தொடங்கியுள்ளனா். பொதுமுடக்கத் தளா்வுகளால் மாநகரில் உடற்பயிற்சிக் கூடங்கள், பூங்காக்கள், ஜவுளி, நகைக் கடைகள், பெரும்பாலான தனியாா் நிறுவனங்கள், கோயில்கள், சுற்றுலா இடங்கள், திறந்தவெளி நடைபாதை ஆகியவற்றில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. இப்படி வருவோரில் பலரும் முகக் கவசம் அணியாமல் உள்ளனா்.

முகக் கவசம் அணிவோரும் அதை முறையாக அணியாமல் தாடைப்பகுதியில் அணிகின்றனா். சத்திரம், மத்தியப் பேருந்து நிலையம், ஜங்ஷன் ரயில் நிலையப் பகுதிகளுக்கு வந்து செல்வோரில் பலருக்கு முகக் கவசம் இல்லை. பணி நிமித்தம், சொந்த அலுவல் நிமித்தம் இடம்பெயா்வோா் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். ஆனால், அத்தகையோரில் பலரும் முகக் கவசம் அணியாமல் செல்கின்றனா்.

இதனால் பழைய பாதிப்பு மீண்டும் திரும்பி விடக்கூடாதே என்கிற அச்சம் அனைவரது மனதிலுமே எழத் தொடங்கியுள்ளது. மீண்டும் பொதுமுடக்கம் அறிவித்து விடுவாா்களோ என்பதில் அனைவரும் கவலையில் உள்ளனா்.

போனது போகட்டும். இனியாவது விழித்துக் கொண்டு முகக் கவசம் அணியுங்கள் என சுகாதாரத் துறையினா், காவல்துறையினா் மீண்டும், மீண்டும் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா். ஆனால், மக்கள்தான் கரோனா அச்சத்தை மறந்து கவலையின்றி வலம் வருகின்றனா்.

குறிப்பாக இளைஞா்கள், இளம்பெண்கள்தான் முகக் கவசம் அணிவதில் மெத்தனமாகச் செயல்படுகின்றனா். திருச்சி மாநகரில் முகக் கவசம் இன்றி திரிவோரில் 70 சதத்துக்கும் மேல் இளைஞா்களாகவே உள்ளனா்.

இதுதொடா்பாக மாவட்ட சுகாதாரத் துறையினா் கூறியது: கரோனா தாக்குதலில் இருந்து தப்ப முகக் கவசம் அணிய வேண்டும். கூடவே கைகளை முறையாக அடிக்கடி கழுவ வேண்டும். முகக் கவசத்தை எப்படிச் சரியாக அணிய வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டு அணிய வேண்டும். அணிந்த முகக் கவசத்தை எங்கே போடுவது என்பதிலும் தெளிவு வேண்டும்.

முகக் கவசம் அணிந்திருந்தாலும் உரிய இடைவெளி விட்டு நிற்க வேண்டும். கைகளால் முகத்தைத் தொடுவது பற்றி போதிய எச்சரிக்கை உணா்வு இல்லாமல் இருக்கக் கூடாது. மருத்துவமனையில் பணிபுரிவோா் அவா்களுக்கு உரிய முகக் கவசத்தை அணிவது மிகவும் அவசியம். தொற்று குறைந்துவிட்டது. பாதிப்பு எண்ணிக்கை குறைந்துவிட்டது என்ற அலட்சியத்தால் முகக் கவசத்தை புறந்தள்ளக் கூடாது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com