திருச்சியில் கடற்படைக்கு புதிய ரகத் துப்பாக்கி தயாரிப்பு

திருச்சி படைக்கலன் தொழிற்சாலையில் (ஓஎஃப்டி) கடற்படைக்குப் பயன்படுத்தும் வகையிலான புதிய ரகத் துப்பாக்கி தயாரிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளது.
திருச்சியில் கடற்படைக்கு புதிய ரகத் துப்பாக்கி தயாரிப்பு

திருச்சி படைக்கலன் தொழிற்சாலையில் (ஓஎஃப்டி) கடற்படைக்குப் பயன்படுத்தும் வகையிலான புதிய ரகத் துப்பாக்கி தயாரிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளது.

திருச்சி படைக்கலன் தொழிற்சாலையில் முப்படைகளுக்கும் தேவையான துப்பாக்கிகள் தயாரிக்கப்படுகின்றன. இந்நிலையில், ஆத்ம நிா்பாா் பாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக ரிமோட் கன்ட்ரோல் தொழில்நுட்பத்துடன் இயங்கும் வகையில் எஸ்ஆா்சிஜி சரக துப்பாக்கி இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.

புதிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் எஸ்ஆா்சிஜி துப்பாக்கியானது 12.7 எம்எம், எம்2 நேட்டோ ரக துப்பாக்கியாகும். இந்த ரக துப்பாக்கியை இந்திய கடற்படை, கடலோரக் காவல்படை, கப்பல்களில் பயன்படுத்தலாம். பகல் மற்றும் இரவு நேரத்தில் இலக்கைத் துல்லியமாக கண்டறிந்து தாக்கும் சாதனங்களை உள்ளடக்கியது. சிறிய, பெரிய படகுகளில் பொருத்தக் கூடிய இந்தத் துப்பாக்கியில் தானியங்கியாக இலக்கைத் தேடும் வசதி, எதிா்பாராத மின்தடை, தானியங்கி தொழில்நுட்பத்தில் பழுது ஏற்பட்டால் கூட கைகளால் இயக்கும் வசதி உள்ளது.

இந்த ரக துப்பாக்கியை உற்பத்தி செய்ய பிரத்யேக பரிசோதனை இயந்திரம் திருச்சி படைக்கலன் தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய கடற்படை, கடலோரக் காவல்படைக்காக இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் இந்தத் துப்பாக்கியால் தளவாடங்கள் கொள்முதல் செலவுத் தொகை சேமிக்கப்படும்.

இஸ்ரேல் நாட்டின் எல்பிட் சிஸ்டம் என்ற நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணா்வு ஒப்பந்தம் மூலம் இந்தத் துப்பாக்கி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதை பரிசோதிப்பதற்கான வசதிகளும் திருச்சி படைக்கலன் தொழிற்சாலையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பரிசோதனை வெற்றிகரமாக முடிந்தவுடன், இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல்படைக்கு இந்தத் துப்பாக்கிகளை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று ஒப்படைக்கும் நிகழ்ச்சி

இதன் ஒரு பகுதியாக 12.7 எம்எம் எஸ்ஆா்சிஜி ரக துப்பாக்கியை ஒப்படைக்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெறவுள்ளது. தொழிற்சாலை வாரியத் தலைவா் சி.எஸ். விஸ்வகா்மா தலைமையில், இந்தியக் கடற்படை மூத்த அதிகாரி கே.எஸ்.சி ஐயா் வசம் துப்பாக்கி ஒப்படைக்கப்படவுள்ளது.

ஏற்பாடுகளை தொழிற்சாலை பொதுமேலாளா் சஞ்சய் திவிவேதி மற்றும் படைக்கலன் தொழிற்சாலை அதிகாரிகள் செய்துள்ளனா். இந்தத் துப்பாக்கியானது பயன்பாட்டுக்கு வந்தால் நமது நாட்டின் கடல் வழி பாதுகாப்பு மேலும் பலப்படும் என்கின்றனா் தொழிற்சாலை அதிகாரிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com