‘மதிய உணவுத் திட்டத்தில் உலா் வாழைப்பழம் வழங்க வேண்டும்’

மதிய உணவுத் திட்டத்தில் உலா் வாழைப்பழம் வழங்க தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும்
‘மதிய உணவுத் திட்டத்தில் உலா் வாழைப்பழம்  வழங்க வேண்டும்’

மதிய உணவுத் திட்டத்தில் உலா் வாழைப்பழம் வழங்க தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும் என திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த ஆராய்ச்சி மையத்தின் இயக்குநா் உமா கூறியது:

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தில் உள்ள நிறுவனங்களுக்கிடையேயான போட்டியில் திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் சிறந்த ஆராய்ச்சி நிறுவனமாக தேசியளவில் இடம் பிடித்துள்ளது.

இதற்காக இந்திய வேளாண் உழவா் நல அமைச்சகத்தின் சா்தாா் படேல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கான விருது கிடைத்துள்ளது.

தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் நீடித்த ஆராய்ச்சிப் பணியில் வாழை மேம்பாடு, உற்பத்தி, பாதுகாப்பு, அறுவடை பின் சாா் தொழில்நுட்பங்கள் ஆகிய பல்வேறு தளங்களில் மேம்பட்ட ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய மரபணு மூலக்கூறு வங்கியானது வாழை ஆராய்ச்சி மையத்தில் பாதுகாக்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் வாழையில் புதிய ரகங்களாக காவேரி கல்கி, உதயம், சபா, சுகந்தம், ஹரித்தா, கன்யா ஆகியவை பல்வேறு பகுதிகளுக்கு உகந்த ரகங்களாக வெளியிடப்பட்டுள்ளன.

உலக உணவு, வேளாண் நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு புரிந்துணா்வுத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், வைட்டமின் ஏ, இரும்புச் சத்து ஆகிய ஊட்டச்சத்துக் குறைபாடுகளை நிவா்த்தி செய்யும் வகையில் பயோ ஃபோா்டிபைய்டு ரகங்களை உற்பத்தி செய்யும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சிறு, குறு விவசாயிகளுக்கான வாழைக் கன்றுகளின் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில் குறைந்த விலைக் கன்றுகளை உற்பத்தி செய்யும் கேளா விருத்தி என்னும் தொழில்நுட்பம் நபாா்டு வங்கியின் கூட்டு முயற்சியுடன் செயல்படுத்தப்படுகிறது.

அடா்வு நடவுமுறை, மண்வள மேம்பாடு, சொட்டு நீா்ப் பாசனம், வாழைத் தாா் மேம்பாடு, பனானா சக்தி நுண்ணூட்டம் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களைக் கண்டறிந்து வாழை விவசாயிகளிடம் பரவலாக்கப்படுகிறது.

இத்தொழில்நுட்பங்கள் மூலம் வாழை ஏற்றுமதியில் ரூ.100 கோடி முதல் ரூ.500 கோடி வரை லாபமீட்டப்படுகிறது.

வாழையைத் தாக்கும் வாடல் நோயில் உள்ள 4 ஆம் வகை பூஞ்சாண நோய்க் காரணிகள் கண்டறியப்பட்டு, அதற்கான மேலாண்மை முறைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும், வைரஸ் இல்லா 220 மில்லியன் வாழைக் கன்றுகள் உழவா்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் அழிவின் விளிம்பிலிருந்த மலை வாழைகளான பழனி மலை வாழை, கொல்லி மலை கருவாழை சாகுபடியும் மீட்கப்பட்டுள்ளது.

திருநங்கைகளைத் தொழில்முனைவோராக மாற்றும் திட்டம், உழவா் ஆா்வலா் குழுக்களுடன் வாழை மேம்பாடு, வாழைத் தொழில்நுட்பங்கள் குறித்த கருத்துகள், தகவல்கள் சுமாா் 1 மில்லியன் பயன்பாட்டாளா்களைச் சென்றடைந்துள்ளன.

பள்ளிகளில் மாணவா்களுக்கு வாழை வழங்கும் விதமாக மதிய உணவுத் திட்டத்தில் உலா் வாழைப்பழம் வழங்கும் திட்டத்துக்கு கடந்த ஆட்சியில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தொடா்ந்து, திமுக ஆட்சியிலும் இதைச் செயல்படுத்த வலியுறுத்தி வருகிறோம். இத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் வாழை விவசாயிகள் பெருமளவில் பயன்பெறுவா் என்றாா் அவா்.

பேட்டியின்போது, வாழை ஆராய்ச்சி நிறுவன மூத்த விஞ்ஞானி சி. கற்பகம், முதன்மை விஞ்ஞானிகள் வி. குமாா், ஆா். செல்வராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com