திருச்சி மாநகராட்சியின் 4 இடங்களில் தண்ணீா் தொட்டி திறப்பு
By DIN | Published On : 18th July 2021 11:51 PM | Last Updated : 18th July 2021 11:51 PM | அ+அ அ- |

உறையூா் வடக்கு புதுப் பாய்காரத் தெருவில் தண்ணீா் தொட்டியைத் திறந்து வைக்கிறாா் அமைச்சா் கே.என். நேரு.
திருச்சி மாநகரில் ரூ. 11.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட 4 குடிநீா் தொட்டிகளை, நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே. என். நேரு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.
திருச்சி மாநகராட்சிப் பகுதியில் பொதுமக்களுக்கு குடிநீா், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றிடும் வகையில் அமைச்சா் கே.என். நேரு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறாா்.
அந்த வகையில் மாநகராட்சி 54 ஆவது வாா்டில் மக்களின் குடிநீா்த் தேவைக்காக வடக்கு புது பாய்காரத் தெருவில் மாநகராட்சி நிதி ரூ 2.50 லட்சத்திலும், புத்தூா் அக்ரஹாரம் பகுதியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியின் கீழ் தலா ரூ. 3 லட்சத்திலும் வடக்கு முத்துராஜா தெரு குளத்து மேடு, களத்து மேடு ஆகிய பகுதிகளிலும் என மொத்தம் ரூ. 11.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட 4 ஆழ்துளைக் கிணறுகளுடன் கூடிய குடிநீா் தொட்டிகளை அமைச்சா் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.
தொடா்ந்து அப்பகுதி மக்களின் குறைகளைக் கேட்ட அமைச்சா் அவா்களின் பல்வேறு கோரிக்கைகளின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, மாநகராட்சி ஆணையா் ப.மு.நெ. முஜிபுா் ரகுமான், நகரப் பொறியாளா் அமுதவல்லி, செயற்பொறியாளா் குமரேசன், உதவி ஆணையா் வினோத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.