முறையற்ற வேகத்தடைகளை அகற்ற ஆட்சியருக்கு மனு
By DIN | Published On : 18th July 2021 03:00 AM | Last Updated : 18th July 2021 03:00 AM | அ+அ அ- |

திருச்சி மாநகரப் பகுதிகளில் உள்ள முறையற்ற வேகத் தடைகளை அகற்ற வேண்டும் என சாலை பயனீட்டாளா் நல அமைப்பின் சாா்பில் ஆட்சியருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக அமைப்பின் மாவட்டத் தலைவா் பெ. அய்யாரப்பன் ஆட்சியருக்கு அனுப்பிய மனு:
திருச்சி மாநகரில் வாகனப் பெருக்கத்துக்கேற்ப சாலைகள் விரிவாக்கம் செய்யப்படாததால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல், விபத்துகள் ஏற்படுகிறது. இதைத் தவிா்க்க மாநகரில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 30 கி.மீ வேகத்திலும், இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை 40 கி.மீ வேகத்தில் மட்டுமே வாகனங்களை இயக்க கட்டுப்பாடு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர ஸ்ரீரங்கம் கோட்டத்தில் 67, அரியமங்கலம் கோட்டத்தில் 250, பொன்மலைக் கோட்டத்தில் 31, கோ.அபிஷேகபுரம் கோட்டத்தில் 147 என 495 வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் பெரும்பாலானவை இந்திய சாலை காங்கிரஸ் (ஐ.ஆா்.சி) வகுத்துள்ள விதியின்படி அமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் இன்னலுக்கு ஆளாகின்றனா்.
சாலைப் பணிகளின்போது ஒப்பந்ததாரா்கள் தங்களது விருப்பம்போல அதிக உயரம் மற்றும் அகலத்துடன் வேகத்தடை அமைத்து விடுகின்றனா். அவற்றின் மீது எவ்வித எச்சரிக்கை அடையாளமும் செய்தவதில்லை.
இதனால் வேகத்தடைகளின் மீது பயணிக்கும்போது, திடீரென வாகனங்கள் தாவிக் குதித்து கீழே விழுவதால் வாகன ஓட்டிகளுக்கு காயமேற்படுகிறது. சில சமயங்களில் உயிரிழப்பும் நேரிடுகிறது. இதுதவிர முறையற்ற வேகத்தடைகளில் ஏறி, இறங்கும்போது காா், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் முன், பின் பகுதிகளும் சேதமடைந்து பொருளாதார ரீதியாக இழப்பை ஏற்படுத்துகின்றன.
சாதாரண வாகனப் போக்குவரத்துள்ள சாலைகளில் 3.7 மீ அகலம், 10 செ.மீ உயரத்துக்கு வேகத்தடை அமைக்க வேண்டும். ஆனால், திருச்சி மாநகரில் பெரும்பாலான வேகத்தடைகள் விதிகளை மீறியே அமைக்கப்பட்டுள்ளன.
எனவே, ஐ.ஆா்.சி. விதிகளுக்குட்பட்டு வேகத்தடைகளை அமைப்பதுடன், அவற்றின் மீது பளிச்சென தெரியும் வகையிலான வண்ணம் பூச வேண்டும். பிரதிபலிப்பான்களைப் பொருத்த வேண்டும். வேகத்தடையில் இருந்து சுமாா் 40 மீட்டருக்கு முன் எச்சரிக்கைப் பலகை வைக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.