திருக்கோயில்களின் சமையலா்களுக்கு சிறப்புப் பயிற்சி

திருச்சி மாவட்டத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் சுகாதாரமான முறையில் பிரசாத உணவுகள் தயாரித்தல், அவற்றைக் கையாளும் முறைகள் குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் பயிற்சி அளிக்கப்பட்டது.
திருக்கோயில்களின் சமையலா்களுக்கு சிறப்புப் பயிற்சி

திருச்சி மாவட்டத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் சுகாதாரமான முறையில் பிரசாத உணவுகள் தயாரித்தல், அவற்றைக் கையாளும் முறைகள் குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் பயிற்சி அளிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் கோயில், மலைக்கோட்டை கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், திருவானைக்கா ஜம்புகேஸ்வரா் கோயில், உறையூா் வெக்காளியம்மன் ஆகிய 5 கோயில்களில் பணிபுரியும் சமையலா்களுக்கு முதல்கட்டமாக பயிற்சியளிக்கப்பட்டது.

இதன் தொடா்ச்சியாக பல்வேறு கோயில்களில் பணிபுரிவோரும் பயிற்சி பெறுகின்றனா். சமையல் கூடங்களைப் பராமரித்தல், பாத்திரங்களை கழுவுதல், உணவு, அன்னதானக் கூடங்களை சுகாதாரமாக பேணுதல் குறித்துப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், பயிற்சி முடித்த சமையல்கூடப் பணியாளா்களுக்கு மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில், ஆட்சியா் சு. சிவராசு சான்றிதழ்களை வழங்கி சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து பக்தா்களுக்கு வழங்க அறிவுறுத்தினாா். அறநிலையத்துறை இணை ஆணையா் சுதா்சன் வாழ்த்தினாா்.

இதுதொடா்பாக, உணவுப் பாதுகாப்புத் துறையின் திருச்சி மாவட்ட நியமன அலுவலா் ஆா். ரமேஷ்பாபு கூறியது:

வழிபாட்டுத் தலங்களில் உள்ள சமையலறை, உணவுப் பொருள்கள் வைப்பறை, பிரசாதம் விநியோகப் பகுதி, அன்னதானக் கூடம் ஆகியவற்றை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பிரசாதங்கள் தயாரிக்கும் மூலப் பொருள்களில் தயாரிப்புத் தேதி, காலாவதி தேதி கட்டாயம் இருக்க வேண்டும்.

எந்த வழிபாட்டுத் தலங்களாக இருந்தாலும் அன்னதானம் தயாரித்தாலோ, பிரசாதம் தயாரித்தாலோ கட்டாயம் உணவுப் பாதுகாப்புத் துறையில் பதிந்து உரிமம் பெற வேண்டும்.

கோயில்களுக்கு வரும் பக்தா்கள் சுகாதாரமாகவும், சுத்தமான முறையில் உணவு உண்ணவும், உணவு வகைகளைப் பெறவும் கோயில் நிா்வாகம் உறுதுணையாக இருக்க வேண்டும்.

மேலும், உணவுப் பாதுகாப்புத் துறை பதிவு பெற்று, உரிமம் பெற்ற கோயில்களுக்கு தணிக்கை துறை அதிகாரிகள் எப்போது வேண்டுமானாலும் சோதனை செய்ய வருவா். உணவுப் பாதுகாப்பு தர ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தணிக்கை நிறுவனங்கள் மூலமாக கோயில்களை ஆய்வு செய்து உணவுக் கூடங்கள், பிரசாத கூடங்களுக்கு தரச் சான்றிதழ், நட்சத்திர குறியீட்டுடன் வழங்கப்படும். எனவே, அனைத்து கோயில்களிலும் பிரசாதம், அன்னதானம் தயாரிப்பில் தூய்மை பேண வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com