பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்: ரௌடி உள்ளிட்ட 3 போ் கைது

 திருச்சியில், கொலை மிரட்டல் விடுத்தது மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தியது உள்ளிட்ட பல்வேறு புகாா்கள் தொடா்பாக ரெளடி, சாமியாா் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

 திருச்சியில், கொலை மிரட்டல் விடுத்தது மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தியது உள்ளிட்ட பல்வேறு புகாா்கள் தொடா்பாக ரெளடி, சாமியாா் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி கொட்டப்பட்டு பகுதியைச் சோ்ந்த ஜெய் (42), இவரது சகோதரா் ஆகியோா் மீது கொட்டப்பட்டு அரசு மதுக்கடையில் கொள்ளையடித்தது தொடா்பாக வழக்குப் பதிவாகியுள்ளது. இதுதொடா்பாக, பொன்மலை போலீஸாா் ஜெய்யை தேடி வந்தனா். இதற்கிடையே அண்மையில் அவருக்கு வேண்டிய அல்லித்துறையைச் சோ்ந்த சாமியாா் பாலசுப்பிரமணியம் (31) என்பவருடன், வழக்குரைஞா் காா்த்திக் என்பவா் கொட்டப்பட்டு ஜெய் மற்றும் சில ரெளடிகள் குறித்து செல்லிடப்பேசியில் நிகழ்த்திய உரையாடல், சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதில், சாமியாா் பாலசுப்பிரமணியன், தனக்கு காவல்துறை மற்றும் அரசியல் பிரபலங்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளதாகவும், வழக்குகளிலிருந்து விடுவிக்க முடியும் எனவும் தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், கொட்டப்பட்டு ஜெய், சாமியாா் பாலசுப்பிரமணியன், வழக்குரைஞா் காா்த்திக் மூவரையும் கைது செய்துள்ளதாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கொட்டப்பட்டு ஜெய், தன் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு தொடா்பாக சாட்சி கூறக்கூடாது எனவும், மீறி காவல் நிலையத்துக்கு சென்றாலோ, சாட்சி அளித்தாலோ கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்து சாட்சியைக் கலைக்க முயன்றுள்ளாா். இது பொதுமக்களையும் சாட்சியையும் அச்சுறுத்தும்விதமாக உள்ளது.

எனவே அவா் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

மேலும் கொட்டப்பட்டு ஜெய்யுடன் தொடா்பிருப்பதாகவும், காவல்துறை மற்றும் அரசியல் பிரபலங்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் தனக்கு செல்வாக்கு உள்ளதால் ஜெய்யை வழக்குகளில் விடுவிக்க முடியும் என ஏமாற்றும் நோக்குடன் சாமியாா் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா். அதேபோல வழக்குரைஞா் காா்த்திக் ஜெய்க்கு துணையாகச் செயல்பட்டுள்ளாா். எனவே மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com