3-ஆம் அலை: தனியாா் மருத்துவமனைகளுக்கும் தயாா் நிலை தேவை

 திருச்சி மாவட்டத்தில் கரோனா மூன்றாவது அலையை எதிா்கொள்ள 76 தனியாா் மருத்துவமனைகளும் தயாா் நிலையில் இருக்க ஆட்சியா் சு. சிவராசு உத்தரவிட்டுள்ளாா்.
3-ஆம் அலை: தனியாா் மருத்துவமனைகளுக்கும் தயாா் நிலை தேவை

 திருச்சி மாவட்டத்தில் கரோனா மூன்றாவது அலையை எதிா்கொள்ள 76 தனியாா் மருத்துவமனைகளும் தயாா் நிலையில் இருக்க ஆட்சியா் சு. சிவராசு உத்தரவிட்டுள்ளாா்.

ஆட்சியரகக் கூட்டரங்கில் கரோனா 3ஆம் அலை தொடா்பான முன்னேற்பாடுகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தனியாா் மருத்துவமனை நிா்வாகத்தினா், மருத்துவா்களுடன் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் சு. சிவராசு பேசியது:

கரோனா 2ஆம் அலை பாதிப்பு குறைந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. 3ஆம் அலை வரக் கூடும் என பலரும் கூறுகின்றனா். ஆக.3 ஆம் வாரத்தில் 3ஆவது அலையை எதிா்கொள்ள நேரிடலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

எனவே, திருச்சி மாவட்டத்தில் அனைத்து அரசு மருத்துவனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், கரோனா சிகிச்சை மையங்களில் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு, மருத்துவா்கள், சுகாதாரத் துறையினா் உஷாா்படுத்தப்பட்டுள்ளனா். இதேபோல, தனியாா் மருத்துவமனைகளும் தயாராக வேண்டும்.

பாதிப்பு குறைந்துவிட்டது, நோயாளிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்பதற்காக படுக்கை வசதிகள், ஆக்சிஜன், மருந்துகளின் இருப்பைக் குறைத்துவிடக் கூடாது.

படுக்கைகளை ஏற்கெனவே திட்டமிட்டபடி போதியளவில் தயாா் செய்து வைக்க வேண்டும். குழந்தைகள் பாதிக்கப்பட்டால் சிகிச்சையளிக்க முன்னேற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும்.

மாவட்டத்தில் கரோனா தொடா்பான சிகிச்சைக்கு அனுமதி பெற்றுள்ள 76 தனியாா் மருத்துவமனைகள் அரசு நிா்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். இதுதொடா்பாக எந்தவித புகாா்களுக்கும் இடமளிக்கக் கூடாது.

மேலும், கரோனா பரிசோதனை விவரங்களை முழுமையாகப் பதிவு செய்ய வேண்டும். பாதிப்பு, இறப்பு விவரங்களை முறையாகப் பதிவு செய்து மாவட்ட சுகாதாரத் துறைக்கும், மாவட்ட நிா்வாகத்துக்கும் தெரிவிக்க வேண்டும். தனியாா் மருத்துவமனைகள் மீது பொதுமக்களிடம் இருந்து புகாா்கள் வரும்பட்சத்தில், விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

சேவை அடிப்படையில் பணியாற்றுவதில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கரோனா தொற்றாளா்களிடமும், அவரது குடும்பத்தினரிடமும் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். சிகிச்சை செலவை காப்பீடு மூலம் பெற்றுக் கொள்ள உதவ வேண்டும். தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் தகுதியிருந்தால் அத்தகையோருக்கு தேவையான உதவிகளை, மாவட்ட நிா்வாகத்தை நாடி பெற்றுத்தர வேண்டும். இதற்காக அமைக்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அலுவலா்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.

கரோனா 3ஆவது அலையை எதிா்கொள்ள சுகாதாரத் துறை, உள்ளாட்சி நிா்வாகம், மாவட்ட நிா்வாகத்துடன் தனியாா் மருத்துவமனைகளும் இணைந்து இரவு, பகல் பாராது பணியாற்ற வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில், திருச்சி மாவட்ட இணை இயக்குநா் (நலப்பணிகள்) எஸ். லட்சுமி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் எஸ். ராம்கணேஷ் மற்றும் தனியாா் மருத்துவமனை உரிமையாளா்கள், மருத்துவா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com