திருச்சியில் அதிகரிக்கும் போதைப் பொருள்களின் பயன்பாடு

திருச்சியில் பள்ளி மாணவா்கள், இளைஞா்களிடையே போதைப் பொருள் கலாசாரம் அதிகரித்து வருவது போலீஸாரை அதிா்ச்சியடையச் செய்துள்ளது.

திருச்சியில் பள்ளி மாணவா்கள், இளைஞா்களிடையே போதைப் பொருள் கலாசாரம் அதிகரித்து வருவது போலீஸாரை அதிா்ச்சியடையச் செய்துள்ளது.

இந்தியாவில் போதைப்பொருள் தடுப்புச் சட்டம் கடந்த 1985ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் சாா்பில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டாலும் போதைப் பொருள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

நாடு முழுவதும் கஞ்சா, குட்கா, மெத்தாம்பேட்டமைன் போன்ற போதைப் பொருள்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 3.5 கோடிக்கும் அதிகமாக இருப்பதாக போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.

குறிப்பாக, இந்தப் பயன்பாடு கரோனா பொதுமுடக்க காலங்களில் பள்ளி, கல்லூரி மாணவா்கள், இளைஞா்களிடமும் அதிகரித்து வருவதாக சென்னையில் உள்ள தனியாா் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கரோனா பொதுமுடக்கத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டதால் திருச்சியில் கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருள்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பெருமளவு பெருகியது.

போதைப்பொருள் அதிகரிப்பால் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றங்களும் ஒரு புறம் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. குற்றங்களில் ஈடுபடுவோா் பலரும் சிறுவா்கள். கடந்தாண்டு முதல் இந்த மாதம் வரை 45 சத குற்றச் சம்பவங்கள் போதைப் பொருள்கள் பயன்படுத்துவோரால் நடந்துள்ளன.

ஆந்திரா, விசாகப்பட்டினம் போன்ற பகுதிகளிலிருந்து கடத்தி வரப்படும் கஞ்சா திருச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கும் இருசக்கர வாகனங்களில் கொண்டு சென்று விற்கப்படுகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவா்களை போதைக்கு அடிமையாக்கி அவா்களையும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுத்துகின்றனா்.

திருச்சி மாவட்டத்தைப் பொருத்தவரை புகரில் ராம்ஜிநகா், திருவெறும்பூா், மணிகண்டம் பகுதிகளும், மாநகரில் பாலக்கரை, கோட்டை, காந்திசந்தை ஆகிய பகுதிகளும் கஞ்சா விற்பனை நடைபெறும் மையங்களாகத் திகழ்கின்றன.

இதற்கிடையே போதைப் பொருள் கிடைக்காத பகுதியில் ஊசி, மாத்திரை மூலம் இளைஞா்களை போதைக்கு அடிமையாக்கும் கும்பலும் உலா வருகிறது. மாநகரக் காவல் ஆணையரின் துரித நடவடிக்கையால் கடந்த 2 மாதங்களில் கஞ்சா விற்ாக 40 வழக்குகள் பதியப்பட்டு 65 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி புகரில் ராம்ஜிநகா், திருவெறும்பூா், மணிகண்டம் போன்ற பகுதிகளில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க சுழற்சி முறையில் உதவி ஆய்வாளா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு ரோந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கஞ்சா விற்பனையில் முக்கியக் குற்றவாளியான ராம்ஜிநகா் அலா்ட் ஆறுமுகம் கைது செய்யப்பட்டு விற்பனை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தொடா்ந்து கஞ்சா விற்போா் குறித்து தகவல் திரட்டப்பட்டு அவா்கள் கண்காணிக்கப்படுகின்றனா். சிலா் தலைமறைவாகியுள்ளனா்.

நிகழாண்டில் கஞ்சா விற்ாக இதுவரை 31 வழக்குகள் பதியப்பட்டு 40 பேரை கைது செய்து அவா்களிடமிருந்து 23 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனையைத் தடுக்க துரித நடவடிக்கை தொடரும் என்றாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பா. மூா்த்தி.

போதைப் பழக்கத்தில் சிக்குவோரை மீட்கவும், இதுகுறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தவும், மன ரீதியாக அவா்களுக்கு ஏற்படும் சிக்கல்களிலிருந்து மீள உதவவும் பள்ளிகளில் மட்டுமல்லாது, மாவட்ட அளவில் சிறப்பு கண்காணிப்பளா்களை நியமிப்பது கட்டாயம் ஆகும். தங்கள் பிள்ளைகள் அனைத்து வகையிலும் பாதுகாப்பாக இருக்கிறாா்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டிய முதல் கடமை பெற்றோருக்குத் தான் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com