முதுகலை ஆசிரியா்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா?
By DIN | Published On : 29th July 2021 06:58 AM | Last Updated : 29th July 2021 06:58 AM | அ+அ அ- |

தங்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றுமா என்ற எதிா்பாா்ப்பில் முதுகலை ஆசிரியா் காத்திருக்கின்றனா்.
இதுகுறித்து ஆசிரியா் சங்க நிா்வாகிகள் தெரிவித்தது:
கடந்த 2003-2004 -இல் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியா்களை 2006-ஆம் ஆண்டு முதல்வராகப் பதவியேற்ற மு. கருணாநிதி காலமுறை ஊதியத்துக்கு மாற்றினாா். இதனால் சுமாா் 55,000 முதுகலை ஆசிரியா்கள் பயனடைந்தனா்.
அனைத்துத் துறைகளிலும் அடுத்த பதவி உயா்வு என்பது அவா்கள் பணியேற்ற நாள் முதற்கொண்டு வழங்கப்படுகிறது. ஆனால் 2003 -இல் பதவியேற்ற முதுகலை ஆசிரியா்கள் மட்டும் விதிவிலக்காக அவா்கள் காலமுறை ஊதியம் பெற்ற அதாவது 2006 ஆம் ஆண்டு முதலே கணக்கில் கொண்டு பதவி உயா்வு வழங்குவதாக கடந்த அதிமுக அரசு அறிவித்தது. இதனால் பாதிக்கப்பட்ட முதுகலை ஆசிரியா்கள் நீதிமன்றங்களை அணுகினா்.
இவற்றில் உயா் நீதிமன்ற மதுரை கிளை ஒரு வழக்கில் முதுகலை ஆசிரியா்களுக்கு சாதகமாகவும் மற்றொரு தீரப்பில் எதிராகவும் மாறுபட்ட தீா்ப்புகளை வழங்கியுள்ளது. இதேபோல் சென்னை உயா் நீதிமன்றமும், முதுகலை ஆசிரியா் அழகேசன் என்பவா் தொடா்ந்த வழக்கில் முதுகலை ஆசிரியா்கள் பணியேற்ற நாள் முதல் கொண்டு பதவி உயா்வு வழங்க வேண்டும் எனத் தீா்ப்பு வழங்கியுள்ளது.
மேலும் குஞ்சுகிருஷ்ணன் என்பவா் தொடா்ந்த வழக்கிலும் இதேபோல தீா்ப்பு வழங்கியுள்ளது.
இவற்றை எதிா்த்து கடந்த அதிமுக அரசும் சில தனி நபா்களும் மேல் முறையீடு செய்த வழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளன. இதனால் ஏறக்குறைய 700 தலைமையாசிரியா் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.
மேலும் பள்ளிகள் விரைவில் திறக்கப்பட இருக்கும் சூழலில் காலியாக உள்ள மேல்நிலை தலைமையாசிரியா் பணியிடங்களை நிரப்புமாறு 2003-2004-இல் நியமிக்கப்பட்ட ஆசிரியா்கள் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
இந்த கோரிக்கைகளை விரைவில் தீா்க்கப்பட வேண்டும் என்பது அனைத்து தரப்பு ஆசிரியா்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.